அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்; நசீருக்கு கிடைக்க சாத்தியம் அதிகம்: மு.கா. உயர் மட்டத்தவர் தெரிவிப்பு

🕔 January 19, 2018

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என்று, அந்தக் கட்சியின் உயர் மட்டத்தவர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கு, அந்தப் பதவி வழங்கப்படுவதற்கான அதிகபட்ச சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்னும் சில திங்களில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ மற்றும் அந்தக் கட்சியின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் ஆகியோரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தமக்கு வழங்குமாறு மிகக் கடுமையாக மு.கா. தலைவரை வற்புறுத்தி வருகின்றமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

2011ஆம் ஆண்டு மு.காங்கிரசின் ஊடாக அரசியலுக்குள் நுழைந்து, அதே ஆண்டில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரான ஏ.எல்.எம். நசீர்; 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்றிருந்தார்.

கிழக்கு மாகாணசபை  தற்போது கலைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, நசீருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்