மிஸ்டர் கிளின் எனப் போற்றப்பட்ட ரணில், கிளின் போல்ட் ஆகிவிட்டார்; முன்னாள் எம்.பி. நையாண்டி

🕔 January 4, 2018

–  க. கிஷாந்தன் –

‘மிஸ்டர் கிளின்’ என, இதுவரை காலமும் போற்றப்பட்டு வந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிணைமுறி விவகாரத்தினால் ‘கிளின் போல்ட்’ ஆகிவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இதன்படி முழு ஐக்கிய தேசிய கட்சியினரும் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, நோர்வூட் பிரதேசத்துக்கு இன்று வியாழக்கிழமை வருகை தந்திருந்த சந்திரசேகரனிடம் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

பிணை முறி அறிக்கையின் படி, 11, 145 மில்லியன் ரூபாய் பொதுமக்களின் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ‘மிஸ்டர் கிளின்’ என போற்றப்பட்டு வந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிணைமுறி விவகாரத்தினால் ‘கிளின் போல்ட்’ ஆகிவிட்டார்.

65 ஆண்டு கால நமது நாட்டு அரசியலில், ஐக்கிய தேசிய கட்சியினர் உட்பட ராஜபக்ஷக்களும் பொது சொத்துக்களை சூறையாடி வந்துள்ளனர்.

பிணைமுறி விவகாரத்தில் மக்கள் விடுதலை முன்னணி குழு ஒன்றினை அமைத்து, கோப் அறிக்கையை சமர்ப்பித்ததன் ஊடாகவே இதில் நடந்த மோசடி கண்டறியப்பட்டது.

இந்த விவகாரத்தில் முழு ஐக்கிய தேசிய கட்சியினரும் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். அத்தோடு பிணைமுறி விடயத்தில் சம்மந்தப்பட்டுமுள்ளனர். பிணை முறி விவகாரம் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு அதன் அறிக்கையினை தெளிவாக சமர்ப்பித்த பின்னர், அதை ஜனாதிபதி தெளிவாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இதன்படி முழு ஐக்கிய தேசிய கட்சியினரும் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது. அத்தோடு ராஜபக்ஷக்களும்  இம் மோசடியில் தொடர்பாக எதிர்காலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் விசாரணை நடத்த வேண்டும். அத்தோடு மக்களின் சொத்துகளை சூறையாடியுள்ள மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க ஜே.வி.பி தயாராக இருக்கிறது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்