தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் தீர்மானிப்போம்: துமிந்த திஸாநாயக்க

🕔 December 29, 2017

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தைத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளைப் போன்றே, சுதந்திரக் கட்சியின் முழுக்கவனமும் தற்போது தேர்தல் தொடர்பிலேயே உள்ளதாகவும் அவர் கூறினார்.

“தேர்தலின் பின்னர் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி, எமது கட்சிக்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையிலான ஒப்பந்தத்தை முன்னர் போல் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிப்போம். மேலும், ஐக்கி தேசியக் கட்சியுடனும் அது தொடர்பில் பேசுவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, மேலும் ஒரு வருடத்துக்கு தேசிய அரசாங்கத்தை தொடரும் பொருட்டு, சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான ஒப்பந்தத்தை நீடிக்குமாறு, சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க கூறியுள்ளதாக, நேற்று முன்தினம் புதன்கிழமை – ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும கூறியிருந்தார்.

இந்த நிலையில், சந்திரிக்கா அவ்வாறு கூறியமை, அவருடைய பரிந்துரையாகும் என, சு.கட்சி செயலாளர் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், இம்மாதம் 31ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்