முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது; அமைச்சர் ஹக்கீம்

🕔 July 5, 2016

லங்கையில் முஸ்லிம்களுக்கு, தீய இனவாத சக்திகளின் Hakeem - Haj - 02அண்மைக் காலச் செயற்பாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள போதிலும், நல்லாட்சி அரசாங்கம் அதற்கு இடமளிக்க மாட்டாது என நாம் திடமாக நம்புகின்றோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இலங்கையிலும், உலக நாடுகளிலும் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகங்கொடுத்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ‘ஈதுல் பித்ர்’ பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அணுகுவதற்குரிய ஆன்மீக பலத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் அருள வேண்டும்.

இறையச்சம், சகிப்புத் தன்மை, ஈகை, புலனடக்கம், பரோபகாரம், புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் போன்ற உயர் பண்புகளை புனித ரமழான் நோன்பு காலம் உலகளாவிய முஸ்லிம்கள் மத்தியில் ஆண்டுதோறும் ஏற்படுத்துகின்றது.

இலங்கையை பொறுத்தவரை பொதுவாக சிறுபான்மை மக்கள் மீதும் குறிப்பாக முஸ்லிம்கள் மீதும் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அட்டூழியங்கள், அநியாயங்கள் என்பன இனிமேல் முற்றாக ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு, தீய இனவாத சக்திகளின் அண்மைக் காலச் செயற்பாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள போதிலும், நல்லாட்சி அரசாங்கம் அதற்கு இடமளிக்க மாட்டாது என நாம் திடமாக நம்புகின்றோம்.

அத்துடன், அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியவற்றினால் பாதிப்புக்குள்ளான மக்களும், வடக்கிலும் கிழக்கிலும் இருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக வாழ்ந்து வரும் மக்களும், முன்னர் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களும் துயரங்களுக்கு மத்தியில் இன்னுமொரு ‘ஈதுல் பித்ர்’ பெருநாளை சந்திக்கும் இவ் வேளையில், அவர்களது வாழ்விலும் சுபீட்சமும், விமோசனமும் ஏற்படுவதற்கு எங்களால் இயன்ற அனைத்து பங்களிப்புக்களையும் நல்குவதற்கு திடசங்கற்பம் பூணுவோமாக.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்