300 மில்லியன் ரூபா கடன் நொவம்பர் மாதத்தில் மீட்கப்பட்டுள்ளது: தேசிய வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் தெரிவிப்பு

🕔 December 2, 2022

– முனீரா அபூபக்கர் –

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நொவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களை மீளப்பெற்று, சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கடன் மீளப்பெறுவது மிகவும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அனைத்து மாவட்ட முகாமையாளர்களையும் கண்டிக்கு வரவழைத்து, மாதாந்தம் 300 மில்லியன் ரூபா கடன் தொகையை வசூலிக்கும் இலக்கு வழங்கப்பட்டதாக தலைவர் குறிப்பிட்டார். இதற்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அந்த செயலமர்வுக்கு பிறகு கடனை மீளப் பெறும் நடவடிக்கைகளை படிப்படியாக வளர்த்துக்கொள்ள முடியும் என்றார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வருமான வளர்ச்சியானது பெரும் சாதனையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது இம்மாதமும் 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அதன் தலைவர், அடுத்த வருடமும் இதே போன்று வருமான நிலைமையை பேணுவதற்கு தேவையான திட்டங்களை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவினங்களுக்காக கிட்டத்தட்ட 150 மில்லியன் ரூபாவைச் செலவிடப்படுகிறது. எனினும் தற்போதைய வருமானத்தின் படி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திறைசேரிக்கு சுமையின்றி இயங்கக்கூடியதாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு 3750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் – பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு கிட்டத்தட்ட 2750 மில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக எதிர்காலத்தில் வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ரஜீவ் சூரியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்