தீர்மானங்களுக்கு மாறாக சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்பு: இடைநிறுத்தப்பட்டவர்களின் செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என்கிறது மக்கள் காங்கிரஸ்

🕔 March 23, 2022

ட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பாகாது என்று அந்தக் கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் கட்டுப்பாடுகளையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஷாரப் முதுநபீன் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரும், ஜனாதிபதி தலைமையில் இன்று (23) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை’ என்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை மீறி, அவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்கள் கட்சியிலிருந்தும், உறுப்புரிமையிலிருந்தும், கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, இவர்கள் கட்சியின் பெயரை சொல்லிக்கொண்டு, கட்சியின் சார்பாக சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அருகதையற்றவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் செயலாளர் சுபைர்தீன் குறிப்பிட்டுள்ளார்.

கலந்து கொண்டவர்கள் யார்?

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை தீர்மானித்திருந்த நிலையில் அந்தக் கட்சிகளின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர், இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தேர்வான எஸ்.எம். முஸாரப் மற்றும் அலிசப்றி ரஹீம் ஆகியோர் இந்த சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இருவர்கள் மூவரும் கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்