தலைப்புச் செய்திகள்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு மாதந்தோறும் 80 கோடி ரூபாய் நஷ்டம்: அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு

விலை உயர்வுகளிலிருந்து நுகர்வோரைக் காப்பதற்காக, அரசுக்குச் சொந்தமான லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனம், உள்நாட்டு எரிவாயுவை, அதன் விலையிலும் குறைந்த விலையில் விற்பனை செய்வதால், மாதந்தோறும் ரூ. 800 மில்லியன் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (18) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபையில் உரையாற்றிய அமைச்சர், லிட்ரோ கேஸ் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலின்டர்களை நிரப்புவதாகக் குறிப்பிட்டார்.

ஒக்டோபர் மாத இறுதிக்குள் அந்நிறுவனம் ரூ. 5,900 மில்லியன் ஒட்டுமொத்த லாபத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், சில்லறை விலைகளை உயர்த்துவதற்குப் பதிலாக நஷ்டங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் அந்த வருவாயின் பலன் தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.

லாஃப்ஸ் கேஸ் விநியோகத் தடைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, லிட்ரோ நிறுவனம் தனது விநியோகத்தை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், இந்த மாதம் 41,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை இறக்குமதி செய்துள்ளதாகவும், அடுத்த மாதம் கூடுதலாக 40,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய விலை நிர்ணய தகராறுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், பல மாதங்களாக நிலவிய விநியோக பற்றாக்குறையைத் தொடர்ந்து லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் விதித்த கடுமையான விலை உயர்வை நியாயமற்றது என்று விவரித்தார்.

மேலும், அரசின் தலையீட்டைத் தொடர்ந்து அந்நிறுவனம் தனது விலையை 745 ரூபாயினால் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.