தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ-வை பிணையில் செல்வதற்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம பிணை வழங்கி உத்தவிட்டுள்ளார்.

2.5 மில்லியன் ரூபா பெறுமதியான தனிப்பட்ட பிணைப் பத்திரங்களின் அடிப்படையில், அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பொல்கொல்ல பகுதியில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அரங்கிற்கு நாற்காலிகளை கொள்முதல் செய்த போது நடந்த முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைதானார்.

இந்தக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையானது மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு (Central Engineering Consultancy Bureau) சுமார் 7.97 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு, லஞ்ச – ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் இன்று வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த போது, ஜோன்ஸ்டன் பெனாண்டோ கைது செய்யப்பட்டார்.