தலைப்புச் செய்திகள்

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு

க்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி அவரை நீதமன்றில் ஆஜர்படுத்திய போது – இன்றைய தினம் வரை அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அக்கரைப்பற்று மாநகர சபையில் பணியாற்றிய அரச பெண் உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக – ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சக்கி அதாவுல்லா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சக்கி அதாஉல்லா தற்போது சுகயீனமுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படாத நிலையிலேயே, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் பதவி வகித்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று – பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதியளித்து, அவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, குறித்த பெண் அண்மையில் முகநூல் நேரலை ஊடாக கூறியிருந்தார்.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் அப்பெண் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காகப் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார். இதன்போது பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினர் – அவரைக் கைது செய்தனர்.

அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை(18)  அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக ஓகஸ்ட் 19 ஆம் திகதி (இன்றைய தினம்) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக முற்படுத்தப்பட்டபோதே – விளக்கமறியல் செப்டம்பர் 01 வரை நீடிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியிலேயே, அவரை இம்மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.