
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறித்தும், அவரின் உடல்நிலை மோசமடைந்து வருவது தொடர்பிலும் பாப்பரசர் பதினான்காம் லியோவை தலையிடுமாறு, சுரேஷ் சாலேயின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையிலுள்ள வத்திக்கானின் பிரதிநிதி மூலம் இந்த வேண்டுகோள் இன்று செவ்வாய்க்கிழமை (23) சமர்ப்பிக்கப்பட்டது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, சுரேஷ் சாலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டு, இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தப் பின்னணியில், மனிதாபிமான அடிப்படையில் பாப்பரசரின் தலையீட்டை குடும்ப உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.


