தலைப்புச் செய்திகள்

வீதியை விட்டு விலகிய கார், நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் மூவர் மரணம்: சாய்ந்தமருதில் பெருந் துயரம்

– நூருல் ஹுதா உமர் –

சாய்ந்தமருதில் பாதையை விட்டு விலகிய சொகுசு கார் – ஒன்று நீரில் பாய்ந்து மூழ்கிய நிலையில், அதனுள் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (27) காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

நீரில் பாய்ந்த காரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் இருந்தனர். அவர்களை மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் போராடி கரைக்கு கொண்டுவந்த நிலையில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.

கார் நீரில் முற்றாக மூழ்கியிருந்த நிலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல், கடும் பிரயத்தனங்களின் மத்தியில், கார் கரைக்குக் கொண்டு வரப்பட்டது.

பின்னர் காரில் இருந்த மூவரையும் அம்பியூலன்ஸ் மூலம் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர்கள் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதை சேர்ந்த சின்னலெப்பை சபூர்தீன் (வயது 62 – கணவர்), முஹம்மது தம்பி தஸ்மி (வயது 59 – மனைவி), முஹம்மட் ஜரீன் அசலா மெஹ்விஸ் (வயது 6 – பேத்தி) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா அமைப்புக்கள், கல்முனை சுழியோடிகள், மீட்பு படையினர், பொலிஸார், கடற்படையினர், பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள், பொதுநல அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சாய்ந்தமருது – வொலிவேரியன் கிராமத்தில், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் – பாதையை விட்டு மேற்படி கார் விலகி, நீரில் பாய்ந்ததால் இந்த விபத்து நேர்ந்தது.