கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு விருது

🕔 October 28, 2022

– பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு, 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் விருதும் சான்றிதழ்களும் கிடைக்கப்பெற்றன.

வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் வந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இவ்விழா, கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி நிலைய கூட்ட மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றது.

இதில் வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல அரச நிறுவனங்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அரச நிறுவனங்களில் நடத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறனில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழா, கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்டு நேற்றயதினம் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு விருதும் சான்றிதழ்களும் கிடைக்கப்பெற்றது.

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத சித்த வைத்தியசாலைக்கு விசேட திறமைச் சான்றிதழுடன் விருதும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துக்கு திறமைச் சான்றிதழும் கிடைக்கப்பெற்றன.

இவ்விருதுகளை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி இ. ஸ்ரீதர் மற்றும் புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத சித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜே. பாஸ்க்கரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்