முகக்கவசம் அணியாதோரை அடித்தாலும் தவறில்லை; டொக்டர் சுகுணன்: வன்முறையைத் தூண்டுவதாக சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் தெரிவிப்பு

🕔 September 10, 2021

– அஹமட் –

‘முகக் கவசங்களை சரியாக அணியாதவர்களுக்கு அடித்தாலும் தவறில்லை’ என்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஜி. சுகுணனின் இந்த பதிவானது வன்முறையைத் தூண்டி விடுவதாகவும், சட்டத்துக்கு விரோதமானதாக அமைந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

‘இன்னும் யாராவது மாஸ்க்கை மூக்குக்கு கீழே இழுத்தாலோ அல்லது இரு மீட்டர் இடைவெளியைத் தவிர்த்தாலோ, நீங்கள் அந்த குற்றவாளிக்கு தற்பாதுகாப்புக்காக அடிப்பதில் கூட தவறில்லை’ என, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் சுகுணன் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரின் இந்தப் பதிவு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் இடம் ‘புதிது’ செய்தித்தளம் கருத்து வினவிய போது, அவர் பதிலளித்தார்.

“ஒருவர் குற்றம் செய்வதாகத் தென்பட்டால், அந்தக் குற்றம் தொடர்பாக நீதிமன்றுக்கு அறிக்கையிடல் மட்டுமே அதிகாரிகளின் கடமையாகும். குறித்த நபர் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். அந்த நபர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டால், சட்டத்தினால் பரிந்துரைக்கப்பட்ட தண்டனையினை நீதிமன்றம் வழங்கும்” என்றார்.

மேலும், “குற்றவாளிகளைத் தண்டிக்குமாறு பொதுமக்களைக் கோரும் அதிகாரம் எந்த அதிகாரிகளுக்கும் கிடையாது” என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் சுட்டிக்காட்டினார்.

கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் சுகுணனின் இந்தப் பதிவு – ஒரு சட்டமீறல் என்றும், தேவையில்லாமல் சண்டைகளை மூட்டிவிடும் விடயம் எனவும் பஹீஜ் மேலும் கூறினார்.

முகக்கவசம் அணியாமல் வீதியால் ஒருவர் செல்லும் போது, அவரை மற்றொருவர் தாக்குவது சட்டப்படி குற்றம் என்றும், அவ்வாறான நடத்தை சமாதானக் குலைவுக்கு வழி வகுக்கும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் தெரிவித்தார்.

டொக்டர் சுகுணன் – பேஸ்புக் பதிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்