வில்பத்து விவகாரம்; நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்: ஸ்கைப் மூலம் ஆணைக்குழு முன் றிசாட் தெரிவிப்பு

🕔 November 22, 2020

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஸ்கைப் மூலம் இன்று இரண்டாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நீங்கள் மீள்குடியேற்றத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தபோது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் எத்தனை சிங்கள மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டார்கள் என ஆணைக்குழு அவரிடம் வினவியது.

இதற்கு பதிலளித்த அவர் ´வடமாகாணத்தில் 02 வீதம் சிங்களவர்களும் 05 வீதம் முஸ்லிம்களும் உள்ளனர். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களை அவர்களது கிராமங்களிலிருந்து வெளியேற்றினர். 2009 ஆம் ஆண்டில் நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கவில்லை. அப்போது பசில் ராஜபக்ஷவே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தார். ஆனால் நான் அவரின் திட்டத்தை ஆதரித்தேன்.

விளம்பரம்

“மொனராகல மற்றும் ஹம்பாந்தோட்டை அருகே வசிக்கும் சுமார் 5,000 சிங்களவர்கள் கலபோகஸ்வேவ நமல்கம என்ற பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அங்கு 100 வருடங்களுக்கு அதிகமான பெரிய மரங்கள் இருந்தன. மீள்குடியேற்றத்தின் போது அந்த மரங்களும் வெட்டப்பட்டன. ஆனால் அவர்களுக்கு எதிராக யாரும் முறையிடுவதில்லை. மாறாக அனைவரும் வில்பத்து கல்லாறு காடழிப்பு பற்றியே அதிகம் பேசுகின்றார்கள். உண்மையாகவே அங்கு காடழிப்பு இடம்பெறவில்லை. எனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யவுள்ளேன்” என்றார்.

அவர் இவ்வாறு தெரிவித்த சந்தர்ப்பத்தில்,கல்லாறு தீர்ப்பை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு நீதிபதிகள் ஆணைக்குழுவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments