மு.கா. தலைவரின் பொய் முகத்தை, 07 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தினார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

🕔 July 4, 2020

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தெரியாமல், அந்தக் கட்சியின் தவிசாளராக இருந்த பஷீர் சேகுதாவூத், 2013ஆம் ஆண்டு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டதாக, மு.கா. தலைவர் ஹக்கீமும், அவருக்கு நெருக்கமானோரும் கூறிவந்த குற்றச்சாட்டு பொய்யானதென நிரூபிக்கப்பட்டுள்ளது.

மு.கா. தலைவரின் மேற்படி குற்றச்சாட்டு பொய்யானது என்பதை, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் அம்பலப்படுத்தியுள்ளார்.

‘நேத்ரா’ தொலைக்காட்சியில் ஊடகவியலாளர் ஏ.எம். தாஜ் வழங்கும் ‘சதுரங்கம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே, இந்த விடயத்தை ஹரீஸ் பகிரங்கப்படுத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த 2010 – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில், அவரின் அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருந்தது.

அப்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராகப் பதவி வகித்தார். இந்த நிலையில், மு.காங்கிரஸின் அப்போதைய தவிசாளர் பஷீர் சேகுதாவூத் – உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சராக 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்குத் தெரியாமல், அமைச்சர் பதவியை பஷீர் பெற்றுக் கொண்டார் என்று, மு.கா. தலைவரும் அவருக்கு நெருக்கமானோரும் பஷீருக்கு எதிரான பிரசாரமொன்றை முன்னெடுத்தனர்.

ஆனால், தலைவருக்கு தெரிந்தே – அமைச்சர் பதவியை தான் எடுத்ததாக பஷீர் சேகுதாவூத் கூறி வந்தார். இருந்த போதும், அதனை கட்சிக்குள் பலரும் நம்பவில்லை.

இந்தப் பின்னணயில்தான், பஷீர் சேகுதாவூத் அமைச்சுப் பதவி எடுத்து 07 வருடங்களின் பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ‘சதுரங்கம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ்; உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தினார்.

“அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2013ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் சிபாரிசு செய்தமைக்கு அமைவாகவே, அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக பஷீர் சேகுதாவூத் நியமிக்கப்பட்டார்” என்று – ‘சதுரங்கம்’ நிகழ்ச்சியில் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மு.கா. தலைவரும் அவருக்கு நெருக்கமானோரும் பஷீர் சேகுதாவூத் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டை பொய்யென ஹரீஸ் நிரூபித்துள்ளதோடு, மு.கா. தலைவரின் பொய் முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

Comments