நஸீர் பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட வேண்டும்: மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானம்

🕔 March 6, 2020

திர்வரும் பொதுத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர் களமிறக்கப்பட வேண்டும் என, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியம் சம்மந்தமாகவும், சமகால அரசியல் தொடர்பாகவும் மேற்படி மத்திய குழுக் கூட்டத்தில் பேசப்பட்டதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல். நஸீரை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராக நியமிக்க ஆசனம் வழங்க வேண்டும் எனவும், அட்டாளைச்சேனை பிரதேசத்தின் வாக்குப்பலத்தின் மூலம் நஸீரின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும் எனவும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

“கடந்த காலங்களில் மு.காங்கிரஸ் தலைமையின் தீர்மானத்துக்கு இணங்க, தொடர்ச்சியாக மூன்று பொதுத் தேர்தல்களில், கட்சியால் நியமிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேசம் வாக்களித்து வந்தது.

இம்முறை எமது அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரை எமது கட்சியின் வேட்பாளராக நியமிக்க வேண்டும் எனும் வேண்டுகோளினை, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிமிடம் முன்வைக்க வேண்டும்” என்றும் அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மத்திய குழுத் தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்