ஜமால் கஷோக்ஜி கொலை; முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: துருக்கி ஜனாதிபதி எர்துவான்

🕔 October 23, 2018

டகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை, பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம்.பி.களிடம் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் கூறியுள்ளார்.

இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான “வலுவான” ஆதாரங்கள் இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

கசோக்ஜியின் உடல் எங்கே? அவரை கொலை செய்ய யார் உத்தரவிட்டது? போன்ற கேள்விகளுக்கு சௌதி அரேபியா பதிலளிக்க வேண்டும் என்றும் அதிபர் எர்துவான் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே. செளதியில் நடக்க இருக்கும் முதலீட்டு மாநாட்டுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தை ஹேக்கர்ஸ் தாக்கி உள்ளனர்.

செளதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் சீர்த்திருத்த செயற்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக முதலீடுகள் குறித்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

ஜமால் கஷோக்ஜி மரணத்தை ஓட்டி எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த மாநாடு இன்று தொடங்கி உள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் முடக்கப்பட்டுள்ளது.

ஜமால் கஷோக்ஜி கொலையும், மாநாடும்

செளதி அரேபியா நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டதை அடுத்து, செளதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாடு ஒன்றை புறக்கணிப்பது குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா யோசித்து வருவதாக முன்பு தெரிவித்து இருந்தன.

இந்த மாநாடனது இன்று முதல் ஒக்டோபர் 25 வரை செளதி தலைநகர் ரியாத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை ஒருங்கிணைப்பது செளதி அரேபியாவின் இறையாண்மை வள நிதியம்.

செளதியில் உள்ள நிறுவனங்களுக்கு உறவுகளை உருவாக்கி தருவதற்காகவும், வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காகவும் இந்த மாநாடனது நடைபெறுகிறது.

தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உட்பட ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்காவை சேர்ந்த 140 அமைப்புகளின் 150 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தனர்.

ஆனால், ஜமால் கஷோக்ஜி விஷயத்தில் செளதியின் விளக்கம் நம்பகத் தன்மையற்றதாக இருப்பதாக அமெரிக்காவும், பிரிட்டனும் கலந்து கொள்ளாது என்று தெரிவித்து இருந்தது.

அதுபோல ஹெச்.எஸ்.பி.சி.யின் தலைமை செயலர் ஜான் ஃப்ளிண்ட், ஜேபி மோர்கன் தலைவர் ஜமியா டிமொன் மற்றும் ஸ்டேண்டர்ட் சேர்ட்டர்ட்யின் தலைமை செயலர் பின் விண்டர்ஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோமென முன்பே அறிவித்து இருந்தார்கள்.

அதுபோல, ஊபர், ஃபோர்ட், ஆகிய நிறுவனங்களும், ஊடக நிறுவனங்களான ப்ளோம்பெர்க், சி.என்.என் மற்றும் ஃப்னான்சியல் டைம்ஸ் நிறுவனமும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை ரத்து செய்திருந்தன.

நம்ப முடியாது

ஜமால் கஷோக்ஜி கொலையில் செளதி சொல்லும் விளக்கங்கள் நம்புவதற்கு கடினமானதாக உள்ளன என்று கூறி சீமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோ கேஸர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து பின்வாங்கி உள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பிரதிநிதிகளின் பெயர் பட்டியல் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வோரின் பெயர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என செளதி அரசு தெரிவித்துள்ளது.

Comments