அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு

🕔 September 17, 2018

– அஹமட் –

தேசிய காங்கிரசின் பிரதித் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற அந்தக் கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து, உதுமாலெப்பைக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அறிவித்தார்.

தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை இதுவரை காலமும் உதுமாலெப்பை வகித்து வந்த நிலையிலேய, அவருக்கு அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண அரசியல் பார்வையாளர் ஒருவர், தேசிய காங்கிரசினுள்  உதுமாலெப்பை தரம் உயர்த்தப்பட்டுள்ளார் என்பதாகவே இந்த நகர்வுகளை வைத்துப் புரிந்து கொள்ளக் கூடும். ஆனால், கதை வேறாகும்.

அது என்ன கதை என்பதை பேசுவதற்கு முன்னதாக, இப்போதைய பிரச்சினையை விளங்கிக் கொள்ளும் பொருட்டு, பழைய கதைகளைக் கொஞ்சம் புரட்ட வேண்டியுள்ளது.

பழைய கதை

தேசிய காங்கிரசின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான உதுமாலெப்பைக்கும், அந்தக் கட்சியின் தலைவர் அதாஉல்லாவுக்கும் இடையில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளம் அண்மையில் சில பிரத்தியேகச் செய்திகளை வெளியிட்டிருந்தது.

அந்தப் பிளவின் காரணமாக, தேசிய காங்கிரசிலிருந்து உதுமாலெப்பை விலகி, அகில இலங்கை மக்கள் காங்கிரசில்  இணைவதற்கான அதிகபட்ச சாத்தியங்கள் உருவாகியிருப்பதாகவும் ‘புதிது’ செய்தித்தளம் தெரிவித்திருந்தது.

குறித்த செய்திகளால், தேசிய காங்கிரசினுள் பாரிய அதிர்வுகள் ஏற்பட்டிருந்தன. மேலும், அந்தக் கட்சியின் தலைவர் அதாஉல்லாவையும் மேற்படி செய்திகள் யோசிக்கச் செய்திருந்தன.

அதனையடுத்தே, தேசிய காங்கிரசில் உதுமாலெப்பைக்கு பிரதித் தலைவர் பதவியினை அதாஉல்லா வழங்கினார்.

தேசிய காங்கிரசினுள் உதுமாலெப்பையை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்கிற நப்பாசையில்தான், ‘பிரதித் தலைவர்’ என்கிற இரை குத்தப்பட்டதொரு தூண்டிலை அதாஉல்லா போட்டிருக்கின்றார்.

ஆனாலும், உதுமாலெப்பைக்கு வழங்கப்பட்டுள்ள பிரதித் தலைவர் பதவியானது பல்லுக் குத்தவும் உதவாததாகும்.  இருந்தாலும், கட்சியின் தொண்டர்களில் பெரும்பாலானோர், இதை – உதுமாலெப்பைக்குக் கிடைத்த பதவி உயர்வாகவே பார்க்கின்றார்கள்.

தீவிரமடையும் அதிருப்தி

சரி, இந்தப் பிரதித் தலைவர் பதவியுடன் உதுமாலெப்பைக்கு உடன்பாடுகள் உள்ளனவா? இந்தப் ‘பதவி உயர்வை’ உதுமாலெப்பை எப்படிப் பார்க்கிறார்? என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்ளும் பொருட்டும், இதன் பின்னணியில் என்னவெல்லாம் நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காகவும், தேசிய காங்கிரசின் உச்சத்திலுள்ள சில ‘தலை’களுடன் ‘புதிது’ செய்தித்தளம் பேசியது.

அப்போது, உள்ளுக்குள் நடந்த பல விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

தேசிய காங்கிரசின் பேராளர் மாநாடு நடந்த தினத்தன்று, அந்தக் கட்சியின் உயர்பீடக் கூட்டமும் நடந்தது. யார் யாருக்கு என்னென்ன பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை, அந்த உயர்பீடக் கூட்டத்தில்தான் தீர்மானித்தார்கள்.

மேற்படி உயர்பீடக் கூட்டத்தில் – முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை பங்குபற்றிய போதிலும், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல் போசனத்தில் அவர் கலந்து கொள்ளாமல் ‘எஸ்கேப்’ ஆகி விட்டார். முன்புபோல் தலைவருடனும் கட்சியுடனும் ஒட்டுறவான மனநிலை உதுமாலெப்பைக்கு இல்லை என்பதே, இதற்குக் காரணமாகும்.

அதே தினம் பிற்பகல், கட்சியின் பேராளர் மாநாடு நடைபெற்றது. ஆனாலும், அந்த மாநாட்டில் உதுமாலெப்பை கலந்து கொள்வதில்லை என்கிற முடிவுடன்தான் இருந்தாராம். மேலும், உதுமாலெப்பையை தொடர்பு கொள்ள முடியாததொரு நிலைவரமும் ஏற்பட்டதாம்.

ஆயினும், தேசிய காங்கிரசின் உயர் மட்டத்தவர்கள் கடுமையான முயற்சியெடுத்து உதுமாலெப்பையை தொடர்பு கொண்டு, வலிந்து அழைத்தமையினால்தான், வேண்டா வெறுப்புடன் பேராளர் மாநாட்டுக்கு உதுமாலெப்பை சமூகமளித்திருந்தாராம்.

அதேவேளை, பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட உதுமாலெப்பை அணிந்திருந்த ஆடையானது, அவரின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சாதாரணமாக கடை வீதிக்குச் செல்லும் போது அணியும் வகையிலான, சேர்ட் மற்றும் சாரன் அணிந்தவாறுதான் – கட்சியின் பேராளர் மாநாட்டில் உதுமாலெப்பை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் பலரும் கவனித்துப் பேசிக் கொண்டனர்.

இன்னொருபுறம், பேராளர் மாநாட்டில் உதுமாலெப்பையை பேசுமாறு வலியுறுத்திய போதும், அவர் அங்கு பேசுவதற்கு மறுத்துவிட்டார்.

இவ்வாறான கடுமையான அதிருப்திகளை தேசிய காங்கிரசின் பேராளர் மாநாட்டிலும், அன்றைய தினத்திலும் உதுமாலெப்பை வெளிப்படுத்தியிருந்தமையானது, அந்தக் கட்சிக்கும் அவருக்கும் இடையிலான பிளவினை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.

தேசிய காங்கிரசின் பேராளர் மாநாட்டில் உதுமாலெப்பை கலந்து கொள்வதில்லை என்று இருந்த நிலையில், அவரை வலிந்து அழைத்து வரும் வரையில் – உதுமாலெப்பைக்காக அதாஉல்லா உள்ளிட்டோர் வீதியில் காத்து நின்றதாகவும் கட்சிக்குள்ளிருக்கும் முக்கிய ‘தலை’யொன்று தகவல் தந்தது.

உறுதியாகி விட்ட பிரிவு

எது எவ்வாறாயினும், தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை பிரிவதும், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவதும் கிட்டத்தட்ட 70 வீதம் உறுதியாகி விட்டது என்று கூறப்படுகிறது.

இன்னொருபுறம், தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை விலகும் போது, அவருடன் ஒரு பட்டாளமே வெளியேறத் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பட்டாளத்தின் பெயர் பட்டியலும் ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்துள்ளது.

பொருத்தமானதொரு நேரத்தில் அந்தப் பட்டியலை வெளியிடுவோம்.

தொடர்பான செய்திகள்:

01) அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்?

02) அதாஉல்லா – உதுமாலெப்பை பிளவு விவகாரம்: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை

Comments