இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட காரியாலயம், பாகுபாட்டுடன் செயற்படுவதாக குற்றச்சாட்டு

🕔 August 8, 2018

– றிசாத் ஏ காதர் –

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட அலுவலகம், தமிழ் பேசும் இளைஞர்களுக்கான வாய்ப்பினை வழங்குவதிலிருந்து விலகிச் செயற்படுவதாக, இளைஞர் நாடாளுமன்ற அம்பாறை மாவட்ட உறுப்பினர் இஸட்.எம். சாஜித் தெரிவித்தார்.

மேலும், தமிழ் பேசும் இளைஞர்களின் திறன் விருத்திக்கு மேற்படி அலுவலகம் ஒத்துழைப்பு நல்குவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; 

“அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 13 பிரதேச செயலக பிரிவுகள் தமிழ் மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டவையாகும். இந்த நிலையில், மேற்படி 13 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி தமிழ் மொழியில் கருமமாற்றக்கூடிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

அம்பாறை மாவட்டத்திலுள்ள இளைஞர் சேவைகள் மன்ற உயர் அதிகாரிகளில் அதிகமானோருக்கு தமிழ் மொழி தெரியாது. தமிழ் பேசும் இளைஞர்களுக்கு சிங்கள மொழி தெரியாமலுள்ளனர். இதன் காரணமாக, தொடர்பாடலில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

மேலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர், யுவதிகளை மையப்படுத்தி நடத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படாமல், அம்பாறை மாவட்ட அலுவலகத்தினால் தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகின்றனர். சில நிகழ்வுகளுக்குரிய அழைப்புக்கள் காலம் தாழ்த்தியே வழங்கப்படுகின்றன.

இலங்கையில் புரையோடிப்போயிருந்த 30 வருடகால யுத்தம் நிறைவுற்றுள்ள நிலையில், தமிழ் பேசும் மக்களுக்கு சம அந்தஷ்து வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நல்லாட்சியில், அம்பாற மாவட்டத்திலுள்ள தமிழ்பேசும் இளைஞர், யுவதிகள் மொழியை ரீதியாகப் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விசேட தேவையுடைய இளைஞர், யுவதிகளுக்கென பிரத்திகேக செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலுவலகத்தினால் தமிழ் பேசும் விசேட தேவையுடையவர்கள், அவ்வாறான திட்டங்களில் உள்வாங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, அவற்றில் தமிழ் பேசும் இளைஞர்கள் தவிர்க்கப்படுவதுடன், குறித்த வேலைத் திட்டங்களில் தமிழ் பேசும் இளைஞர்களின் பங்களிப்பு மிகக்குறைவு என்கிற மாயையை ஏற்படுத்தி, உயர் அதிகாரிகள் தங்களுக்கு விருப்பமான பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர்  உள்ளனர். ஆனால் இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட அலுவலகத்தினால் நடத்தப்படும் எவ்வித நிகழ்வுகளுக்கும் அவர்கள் அழைக்கப்படுவதில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்