ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்க மறியல்

🕔 October 19, 2016

thissa-attanayaka-011ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளரும், முன்னைநாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவை, எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில், பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பிலான போலி ஆவணங்களை வௌியிட்டார் என்று, இவர் மீது சாட்டப்பட்டுள்ளது.

போலி ஆவணம் தயாரித்ததாக, திஸ்ஸவுக்கு எதிராக சட்டமா அதிபர் 03 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆவணத்தை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியமை தொடர்பிலும் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்ததோடு, அமைச்சுப் பதவியொன்றினையும் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த திஸ்ஸ, குறித்த ஒப்பந்தத்தின் ஆவணங்கள் என சிலவற்றினை ஊடகங்களுக்குக் காட்டியிருந்தார்.

இந்தநிலையில் திஸ்ஸ வௌியிட்ட கருத்துக்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்