ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி?

🕔 May 21, 2018

1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான்.

பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலைகளை அடைந்தது.

24 வயதான கார்ல், ஜெர்மனி அரசின் ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அதற்கு தயாராக இருக்குமாறும் ரேடியோவில் கூறப்பட்டது.

“ஹிட்லர் இறந்துவிட்டார் என்று அறிவித்தபோது புனிதமான இசை இசைக்கப்பட்டது” என்று கார்ல் நினைவு கூர்ந்தார். “ரஷ்ய கம்யூனிச முறையான போல்ஸேவிசத்தை எதிர்த்து ஹிட்லர் போராடி வீழ்ந்தார் என்று சோகமாக அறிவிக்கப்பட்டது” என்கிறார் அவர்.

யூதர்களை அதிகளவில் நாஜிக்கள் துன்புறுத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜெர்மனியில் இருந்து பிரிட்டனுக்கு கார்லும் அவரது சகோதரரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவரது தந்தை ஜெர்மனி நாட்டு யூதராவார்.

“என் வாழ்வை சீரழித்த ஹிட்லரின் மரணச் செய்தியை கேட்டதும் நிம்மதியாக உணர்ந்தேன்” என்று கூறுகிறார் கார்ல்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, பிபிசியின் கண்காணிப்புக் குழுவில் பணிபுரிந்து வந்தார் கார்ல்.

ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளி நாடுகளில் ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்வுகளை கேட்டு, மொழிபெயர்த்து பிரிட்டன் அரசாங்கத்திடம் கூறுவதுதான் கண்காணிப்புக் குழுவின் பிரதாக நோக்கம்.

“ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற அறிவிப்பை பிரிட்டனில் முதலில் கேட்டது நாங்கள்தான்” என்று கூறுகிறார் கார்ல்.

“எங்கள் கட்டடத்தில் இருந்த அனைவரும் உற்சாகமடைந்தனர். அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தோம். ஜெர்மனிக்கு எதிரான போர் முடிவுக்கு வருகிறது என்று அர்த்தம்.”

ஹிட்லர் உயிரிழந்ததில் சந்தேகம் இல்லை என்றாலும், அவர் தன்னை தானே கொலை செய்து கொண்டார் என்பது பின்புதான் தெரிய வந்தது.

ஏப்ரல் 15 – 16 ஜெர்மன் படைகள் மீது சக்திவாய்ந்த பீரங்கித் தாக்குதலை சோவியத் படைகள் நிகழ்த்தியது.

ஏப்ரல் 21 பெர்லினின் புறநகர் பகுதிகளில் புகுந்த செம்படை, அதனை கைப்பற்றியது.

ஏப்ரல் 27 ஜெர்மனிய ராணுவத்தை வெற்றிகரமாக பிரித்து, எல்பெ நதி அருகே அமெரிக்கா மற்றும் சோவியத் படைகள் சந்தித்துக் கொண்டன.

ஏப்ரல் 29 ஹிட்லரும் ஈவா பிரவுனும், ரைக் சேன்ஸலரி தலைமையகத்தின் அடியில் இருந்த பதுங்கு குழியில் திருமணம் செய்து கொண்டனர்.

ஏப்ரல் 30 ஹிட்லரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர். பின்பு, அவரது உடல்கள் எரிக்கப்பட்டன.

மே 1 ஹிட்லரின் மரணமடைந்ததாக ஜெர்மன் ரேடியோ அறிவித்தது

மே 7 ஜெர்மனி நிபந்தனையற்று சரணடைந்ததையடுத்து, ஆறு ஆண்டுகளாக ஐரோப்பியாவில் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது.

“அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், ஹிட்லர் உயிரிழந்துவிட்டதாக ஜெர்மனியர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.”

ஹிட்லர் இறந்ததாக ஜெர்மனியர்கள் அறிவித்ததை உடனடியாக மொழிபெயர்த்தார் ஜெர்மன் கண்காணிப்புக்குழுவில் இருந்த எர்ன்ஸ்ட் கொம்பிரிஜ்.

“அவர் அதனை சிறு காகிதத்தில் எழுதினார். அவர் செய்த மோசமான விஷயம் அதுதான். ஏனெனில் அவர் கையெழுத்து மிகவும் மோசமாக இருந்ததாக” கூறுகிறார் எர்ன்ஸ்டினுடன் பணி புரிந்தவர்.

பின்பு, அரசாங்கத்துக்கு இச்செய்தியை தெரியப்படுத்த லன்டனில் உள்ள கேபினட் அலுவலகத்தை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார் எர்ன்ஸ்ட்.

பிபிசி செய்தி அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்பு இச்செய்தி உலகம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டது.

தற்போது 97 வயதாகும் கார்ல், இச்செய்தியை கேட்ட உலக மக்கள் உற்சாகமடைந்ததாக நினைவு கூர்கிறார்.

ஹிட்லர் இறந்தபோது, கவர்ஷம் பார்க்கில் இருந்த பிபிசி கண்காணிப்புக்குழுவில் 1000 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜெர்மன் பிரிவில் இருந்த 40 பேரில், நாஜி துன்புறுத்தலால் தப்பித்து வந்த யூதர்கள், சமதர்மவாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் பலர் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஹிட்லரின் மரண செய்தியை கேட்டு மகிழ்ந்ததாக கார்ல் தெரிவித்தார்.

ஹிட்லரை மொழி பெயர்ப்பது மிகவும் கடினமானது என்கிறார் கார்ல்.

அவர் ஒரு மோசமான எழுத்தாளர். அதனை ஜெர்மன் மொழியில் படித்தால் அவரது உரைகள் ஈர்க்கக்கூடியதாக இருக்காது. ஆனால், அவர் அதனை பேசும் போது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அவர் அவரது பேச்சு திறனை நம்பியிருந்தார்.

நன்றி: பிபிசி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்