கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல்

🕔 January 11, 2018

– மப்றூக் –

சா
ய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் விசேட நம்பிக்கையாளர் சபை அங்கத்தவராக தன்னை நியமித்துள்ளதாக தெரிவித்து, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுப்பி வைத்த கடிதம் , நேற்று புதன்கிழமை பகல், பக்ஸ் மூலம் கிடைத்ததாக, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா இன்று தெரிவித்தார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை கலைக்கப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிவாசலுக்கு விசேட நம்பிக்கையாளர் சபையினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நியமித்துள்ள நிலையில், அச் சபைக்குரிய அங்கத்தவர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினை கலைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கடந்த 06ஆம் திகதி எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இதற்கமைவாக, இதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு, வக்பு சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.
இதனையடுத்து, வக்கு சபை நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை எடுத்த முடிவின்படி, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை கலைக்கப்பட்டு, அதற்காக நான்கு பேரைக் கொண்ட விசேட நம்பிக்கையாளர் சபையொன்றினை அமைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, சாய்ந்தமரு பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, சாய்ந்தமருது காதி நீதவான் ஐ.எம். செரீப், இலங்கை மின்சார சபையின் கல்முனை காரியாலய பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான் மற்றும் கட்டடத் திணைக்களத்தின் கல்முனைக் காரியாலய பிரதம பொறியியலாளர் ஏ.எம். சஹீர் ஆகியோர், விசேட நம்பிக்கையாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுப்பி வைத்த தனக்கான கடிதம், நேற்று புதன்கிழமை பகல் 1.30 மணியளவில் பக்ஸ் மூலம் கிடைத்ததாக, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா கூறினார்.

எவ்வாறாயினும், தனது திணைக்களத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இவ்விடயம் தொடர்பில் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும் சாய்ந்தமரு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

வீடியோ

Comments