பதிலீடுகளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமையை, ஒதுபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளர் வஹாப்

🕔 October 10, 2017

– மப்றூக் –

பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் கடமையாற்றும் 31 ஆசிரியர்களை எந்தவிதமான பதிலீடுகளும் இன்றி, இடமாற்றம் செய்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் என். அப்துல் வஹாப் தெரிவித்தார்.

பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 97 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில், இவ்வாறானதொரு இடமாற்றத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் செய்திருக்கக் கூடாது எனவும் அவர் கூறினார்.

பொத்துவிலில் கடமையாற்றிய 31 ஆசிரியர்களை, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச பாடசாலைகளுக்கு, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம் அண்மையில் இடமாற்றம் செய்திருந்தார்.

இந்த இடமாற்றத்தை வழங்கிய சில வாரங்களில், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக மௌலவி காசிம் இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

இந்த நிலையில், பொத்துவிலில் இருந்து அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட மேற்படி ஆசிரியர்களின் இடமாற்றங்களை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக புதிதாய் கடமையேற்றுள்ள ஏ.எம். அகமட்லெப்பை ரத்துச் செய்ததோடு, மீண்டும் அவர்கள் கடமையாற்றிய பாடசாலைகளுக்குச் செல்லுமாறும் உத்தரவிட்டார்.

இது இவ்வாறிருக்க,  பொத்துவில் பாடசாலைகளின் அதிபர்கள் கூட்டத் தீர்மானத்தின் படியும், பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுக்கு அமைவாகவுமே மேற்படி ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தை – தான் வழங்குவதாக, அப்போதைய வலயக் கல்விப்பணிப்பாளர் வழங்கிய இடமாற்றக் கடிதங்களில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், தமது பாடாசாலைகளுக்கு இடமாற்றம் மூலம் வழங்கப்பட்ட ஆசிரியர்களை மீளவும் பெற்றுக் கொண்டமை குறித்து, அட்டாளைச்சேனை பிரதேச கல்விச் சமூகத்தினர் கடுமையான விசனங்களை வெளியிட்டு வருவதோடு, இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.

இதேவேளை, ஏலவே ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பொத்துவில் கோட்டப் பாடசாலைகளிலிருந்து பதிலீடுகளின்றி 31 ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமை குறித்தும் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் என். அப்துல் வஹாப்பை ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு பேசியபோதே, மேற்காண்ட விடயங்களை அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பொத்துவில்கோட்டப் பாடசாலைகளில் 05 வருடங்களாகக் கடமையாற்றி வரும், வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது குறித்து, வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். காசிம் எம்முடன் பேசினார். நாமும் அதற்கு இங்கினோம். ஆனால், இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பதிலீடு வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் அதற்கு நாம் இணக்கம் தெரிவித்தோம்.

கடந்த 08ஆம் மாதமளவிலேயே இந்த இடமாற்றத்தை மேற்கொள்வதற்கு எம்மிடம் இணக்கம் கேட்கப்பட்டது.

ஆனால், அப்போது அந்த இடமாற்றத்தை மேற்கொள்ளாமல் வருட இறுதியில், அதுவும் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலீடுகளை மேற்கொள்ளாமல், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதை, எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

அதேவேளை, பொத்துவில் கோட்டப்பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுக்கான ஆசிரியர்கள், தேவைக்கு அதிகமாக உள்ளனர் என்று கூறுப்படுகின்றமை தொடர்பிலும் பணிப்பாளர் வஹாப்பிடம் வினவினோம்.

அதற்கு அவர் பதிலளிக்கையில்; ஆரம்பப் பிரிவுக்கான ஆசிரியர்கள் 12 பேர் அதிகமாக உள்ளமை உண்மைதான். ஆனால், 97 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதனால்,  மேற்படி 12 ஆசிரியர்களையும் பதிலீடாகப் பயன்படுத்திக் கொள்கிறோம்” என்றார்.

பணிப்பாளரின் குரல் பதிவு

தொடர்பான செய்திகள்: 

  1. பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்
  2. ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்