
– எம்.என்.எம். அப்ராஸ் –
ஊடகவியலாளர் நூருல் ஹுதா – தேசிய ஊடக விருது வழங்கும் விழாவில், சமூகப் பிரச்சினைகளை அறிக்கையிட்டமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும், இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யும் – தேசிய ஊடக விருது வழங்கும் விழா, கொழும்பு, சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்றது.
இதன்போதே, ஊடகவியலாளர் ஹுதாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சாய்ந்தமருதைச் சேர்ந்த நூருல் ஹுதா உமர், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக இத்தேசிய ஊடக விருதைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழன் உட்பட பல்வேறு பத்திரிகைகளில் சமூகப் பிரச்சினைகள், மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைச் சவால்கள், கல்வி, சுகாதாரம், சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் அரசியல், சமூக விவகாரங்கள் தொடர்பில் 270 கட்டுரைகளை இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, சமூகத்தில் கவனிக்கப்படாமல் விடப்படும் பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து, அவற்றின் பின்னணியையும் பாதிப்புகளையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் வகையில் அவரது ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன. மக்களின் குரலாகவும், சமூக மாற்றத்திற்கான கருத்துப் பதிவுகளாகவும் அவரது எழுத்துக்கள் வெளிவந்துள்ளன.
2009ஆம் ஆண்டு ஊடகத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்த நூருல் ஹுதா உமர், கடந்த 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகின்றார்.



