
-மப்றூக் –
மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ. பகுர்தீன் – இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 70ஆவது வருடாந்த நிகழ்வில், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – ஹில்டன் ஹோட்டலில் நேற்று (26) – இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 70ஆவது வருடாந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது – பேராசிரியர் அனுர விக்ரமசிங்க, ரொஸ்மன்ட் சேனாரத்ன, மணிக் டி சில்வா, தயா டி அல்விஸ், ராசையா செல்வராஜா, சிறி ரணசிங்க, இந்துனில் கஹவிட்ட அமரசேகர, டி. ஒலிவர் சில்வா மற்றும் லால் ஹெகொட ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 09ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம், அச்சு மற்றும் மின்னணு ஊடகத் துறையில் சிறந்து விளங்கிய – மூத்த ஊடகவியலாளர்கள் 10 பேரை இவ்வாறு விருது வழங்கி கௌரவித்தது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ. பகுர்தீன் 1972ஆம் ஆண்டு தொடக்கம் ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார். தினபதி மற்றும் சண் ஆங்கிலப் பத்திரிகை ஊடாக ஊடகத்துறைக்குள் நுழைந்த இவர் – தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், லேக்ஹவுஸ் பத்திரிகைகள், ரூபவாஹினி மற்றும் சிலோன் ருடே பத்திரிகை ஆகியவற்றின் பிராந்திய ஊடகவியலாளராகப் பணியாற்றுகிறார்
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தக்கு தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப பிராந்திய ஊடகவியலாளர்களில் பகுர்தீனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நெசவுக் கைத்தொழில் அமைச்சராக எம்.ஏ. அப்துல் மஜீத் பதவி வகித்த போது, அவரின் வெகுஜன தொடர்பு அதிகாரியாகவும் பகுர்தீன் பதவி வகித்தார்.
கடந்த காலங்களில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ள இவர், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் அலுவலகத்தில் ஊடக அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் தற்போது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.



