அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம்

🕔 December 27, 2021
அடையாளப் படம்

– புதிது செய்தியாளர் அஹமட் –

ரச அதிகார சபையொன்றுக்குச் சொந்தமான வாகனமொன்று தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) விண்ணப்பம் மூலம் ஊடகவியலாளரொருவர் விவரங்கள் சிலவற்றினைக் கோரியிருந்த நிலையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் பாவித்து வந்த கெப் ரக வானகமொன்று அவரின் பாவனையிலிருந்து ‘காணாமல்’ போயுள்ளது.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கறுப்பு நிறத்தையுடைய கெப் ரக வாகனமொன்றினை சில காலமாகப் பாவித்து வந்தார்.

இந்த நிலையில் மேற்படி வாகனம் – அரச அதிகார சபையொன்றுக்குச் சொந்தமானது என்பதை அறிந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர், அந்த வாகனத்தின் இலக்கத்தைக் குறிப்பிட்டு, அது தொடர்பில் சில விவரங்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மூலம் அந்த அதிகார சபையிடம் கேட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாவித்து வந்த கறுப்பு நிற கெப் ரக வாகனம் தற்போது அவரின் பாவனையிலிருந்தும் ‘காணாமல்’ போயுள்ளது.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது வேறொரு வாகனத்தைப் பாவித்து வருவதாகவும் அறிய முடிகிறது.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் ‘காங்கிரஸ்’ கட்சியொன்றின் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரின் பாவனைக்காக, அதிகார சபையொன்றின் வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது என, சமூக ஊடகங்களில் எழுதப்பட்டு வந்தது.

இது இவ்வாறிருக்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைக் கொண்டு பெறப்படும் எந்தவொரு சலுகையினையும் தனிப்பட்ட ரீதியில் தான் பயன்படுத்தப் போவதில்லை என்றும், அவ்வாறான சலுகைகள் தனக்கு ‘ஹறாமானது’ (விலக்கப்பட்டது) எனவும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் – பள்ளிவாசலொன்றில் வைத்து, பொதுமக்கள் முன்னிலையில் சத்தியம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்