கார் குண்டுத் தாக்குதல்: சோமாலியாவில் 76 பேர் பலி

🕔 December 28, 2019

சோமாலியாவின் தலைநகரில் இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 76 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோமாலியா தலைநகர் மொகதீஷுவில் உள்ள ஒரு பரபரப்பான சோதனைச் சாவடியில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.

தங்களது மருத்துவமனைக்கு 73 பேரின் உடல்கள் வந்துள்ளதாக மதீனா மருத்துவமனையின் இயக்குநர் டொக்டர் முகமது யூசுப்; அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். உயிரிழப்புகள் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல் – ஷபாப் இயக்கத்தை சேர்ந்தவர்களால் இந்த நகரத்தில் இதற்கு முன்னர் அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

அல் – கொய்தாவுடன் கூட்டணி வைத்துள்ள இஸ்லாமியத் தீவிரவாத குழுவால் நடத்தப்படும் அல்-ஷபாப் இயக்கம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சோமாலியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. சோமாலியாவின் தலைநகரை விட்டுக் கடந்த 2011இல் இந்த இயக்கம் வெளியேற்றப்பட்டாலும், அது இன்னும் அந்நாட்டின் மற்ற பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது.

“நான் பார்க்க முடிந்ததெல்லாம் சிதறிய நிலையில் கிடந்த சடலங்கள்தான். அவற்றில் சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருந்தன” என்று கூறுகிறார் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த சாகரியே அப்துகாதிர்.

இந்த குண்டுவெடிப்பில் 90க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கலாம் என்று, சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினரான மொஹம்மத் அப்திரிசாக் கூறுகிறார். இருப்பினும் இந்த எண்ணிக்கையை தான் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள்.

வீதி கட்டமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துருக்கியைச் சேர்ந்த பொறியாளர்கள் குழுவினருக்கு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

Comments