அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர்

🕔 March 14, 2018

    – முன்ஸிப் அஹமட் –

தாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளும், டயர்களும் அக்கரைப்பற்றில் இன்று புதன்கிழமை எரிக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இம்முறை தேசிய காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம். சபீஸ் மற்றும் எம்.சி.எம். யாசிர் ஆகியோர் இருந்து செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை எஸ்.எம். சபீஸ் போட்டியிட்ட பலாஹ் வட்டாரப் பகுதியிலும், எம்.சி.எம். யாசிர் போட்டியிட்ட காதிரியா வட்டாரத்திலுமே டயர்கள் எரிக்கப்பட்டதோடு, அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளும் தீயிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளை யார் யாருக்கு வழங்குவதென, தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று அறிவித்தமையினை அடுத்தே, அவருக்கு எதிராக இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக தன்னை நியமிக்குமாறு, அதாஉல்லாவிடம் சபீஸ் வேண்டுகோள் விடுத்திருந்த போதும், தன்னுடைய புதல்வரை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு அதாஉல்லா  தீர்மானித்துள்ளார்.

அதேபோன்று, பிரதி மேயர் பதவியினை தனக்கு வழங்குமாறு யாசிர் என்பவர், அதாஉல்லாவிடம் கோரியிருந்த போதும், அதனையும் அதாஉல்லா நிறைவேற்றவில்லை.

இதேவேளை, அக்கரைப்பற்றில் டயர்களும் பதாதைகளும் எரிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடங்களுக்கு பொலிஸார் சென்று, தீயை அணைத்துள்ளனர்.

இன்று எரிக்கப்பட்ட அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகள், நடந்து முடிந்த தேர்தலின் போது, வேட்பாளர் சபீஸின் காரியாலத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தவை எனவும் தெரியவருகிறது. 

Comments