மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், மக்கள் காங்கிரசில் இணைந்தார்; ஹக்கீமுக்கு அதிர்ச்சி வைத்தியம்

🕔 December 19, 2017

– மப்றூக் –

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமையினை ‘புதிது’ செய்தித் தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.

மு.காங்கிரசில் தனது பதின்ம வயதில் இணைந்து கொண்ட ஜவாத், அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நெருக்கத்துக்கும்  நேசத்துக்கும் உரியவராக இருந்தார்.

முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப காலத்தில் அந்தக் கட்சியை வளர்ப்பதற்காக,  தனது சொந்த நிதியிலிருந்து கணிசமானளவு பங்களிப்பினை ஜவாத் வழங்கியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் நடவடிக்கை குறித்தும், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தொடர்பாகவும் விமர்சனங்களை, கூர்மையாகவும் நேரடியாகவும் ஜவாத் வெளியிட்டு வந்தமையினால், கட்சித் தலைவரின் கோபத்தினை அவர் அடிக்கடி எதிர் கொள்ள நேர்ந்தது.

அதேவேளை, அரசியல் ரீதியாக ஜவாத்தை தோற்கடிப்பதற்கும் மு.கா. தலைவர் ஹக்கீம் முயற்சித்ததாகவும், மு.காங்கிரசில் இருந்த போதே, ஜவாத் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்காக, குறிப்பாக கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்களை மு.கா. தலைவரிடம் ஜவாத் கையளித்திருந்தபோதும், அவை எதற்கும் மு.கா. தலைவர் சாதகமாகப் பதிலளிக்காமை காரணமாக, கடந்த காலத்தில் ஜவாத் ஏமாற்றமடைந்திருந்தார்.

தமக்கு வாக்களித்த மக்களுக்கு மு.காங்கிரசில் இருந்து கொண்டு, எந்தவித நன்மைகளையும் மேற்கொள்ள முடியாது என்கிற முடிவுக்கு வந்த நிலையிலேயே, அந்தக் கட்சியை விட்டும் விலகி, அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையும் முடிவினை அவர் எடுத்தார்.

அண்மைக்காலமாக, மு.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் தொடர்ச்சியாக இணைந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்