மண் மேட்டுடன் கட்டிடம் சரிந்து விழுந்து, வீடு சேதம்
– க. கிஷாந்தன் –
ஹட்டன் தும்புருகிரிய வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒன்றில் மண்மேட்டுடன் கூடிய கட்டிடம் சரிந்து விழுந்ததில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்தது. ஆயினும், எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை.
ஆயினும், இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பேரை, வேறு இடங்களுக்கு செல்லுமாறு அப்பகுதி கிராம சேவகர் அறிவுறுத்தியுள்ளார்.
இப் பிரதேசத்தில் பெய்துவரும் மழை காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மலையகத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருவதோடு, பனிமூட்டத்துடன் கூடிய சீரற்ற காலநிலை காண்படுகிறது.
பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக, வாகன சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக, இவ்வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள், வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.
குறிப்பாக வாகனத்தின் முன் விளக்குகளை எரிய விட்டுக் கொண்டு பயணிக்குமாறு சாரதிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.