என்னைச் சுட்டுக் கொல்லுமாறு மஹிந்த உத்தரவிட்டிருந்தார்: சரத் பொன்சேகா

🕔 May 4, 2016

Sarath fonseka - 032தான் சிறைவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், தப்பிச் செல்ல முயற்சித்தால் தன்னை சுட்டுக் கொல்வதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார் என்று, முன்னாள் ராணுவத் தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

“எனக்கு 60 பேர் வரையிலான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது அதனை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய 30 ஆக மஹிந்த குறைத்தார்.

இவ்வாறு மிகவும் மோசமாக நடந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது பாதுகாப்பு பற்றி பேச உரிமை கிடையாது.

பயங்கரவாதம் நிலவிய காலத்தில் பொலிஸாரின் கடமைகளை படையினர் செய்தனர்.

எனினும் பயங்கரவாதம் இல்லாத காலத்தில் அவ்வாறு பொலிஸாரின் கடமைகளை படையினர் செய்ய வேண்டிய அவசியமில்லை.

எனவே மஹிந்த ராஜபக்ஷ என்ற நாடாளுமன்ற உறுப்பினர், பொலிஸ் பாதுகாப்பில் திருப்தி கொள்ள வேண்டும்.

அரசியல்வாதி ஒருவருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து தீர்மானிக்க வேண்டியது அரசாங்கம்தான். அரசாங்கத்துக்கு  அந்த உரிமையுண்டு.

ராணுவ கப்டன்களை மஹிந்த தனதுஅருகில் வைத்துக் கொண்ட போதிலும், பிரபுக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான பயிற்சிகள் எவையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

எனக்கு அன்று 20 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே வழங்கப்பட்டனர். நான் கமாண்டோக்களை கேட்ட போது, ஓய்வு பெறுவதனால் அவ்வாறான பாதுகாப்பு வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டது.

2010ம் ஆண்டில் பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடமும் கோரியிருந்தேன். எனினும் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அதற்கு அனுமதியளிக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை படைகளின் சேனாதிபதி அங்கீகரிக்கவில்லை என்றால், அது குறித்து கேள்வி எழுப்ப மஹிந்தவுக்கு உரிமையில்லை.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 10 நிமிட்களில் எனது பாதுகாப்பு நீக்கப்பட்டது. கடுமையான பயங்கரவாதிகளுடன் என்னை சிறையில் அடைத்தார்கள்.

என்னை நீதிமன்றம் அழைத்துச் செல்லும் போது, பாதுகாப்புக்கு இரண்டு ரீ56 ரக துப்பாக்கிகளே வழங்கப்பட்டன, 06 சிறைச்சாலை உத்தியோகத்தர்களே பாதுகாப்பு வழங்கினர்.

நான் தப்பிச் செல்ல முயற்சித்தால் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

பயங்கரவாதிகளுடன் ஒன்றாக பஸ்ஸில் சிறைச்சாலை செல்ல நேர்ந்தது. இவ்வாறுதான் ஒரு ராணுவத் தளபதியை அவர்கள் கவனித்தார்கள்.

அப்படியான நபர் ஒருவர் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோர அருகதையற்றவர். தற்போது எனக்கு 15 பொலிஸ் உத்தியோகத்தர்களே பாதுகாப்பு வழங்குகின்றனர்.

போரை மோற்கொண்ட ராணுவத் தளபதிக்கு 15 பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு போதுமானது என்றால், போர் இடம்பெற்ற காலத்தில் பதவி வகித்த ஜனாதிபதி மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருக்கு 200 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் இருப்பதில் சிக்கல் இருக்க முடியாது.

சரத் பொன்சேகாவுக்கு எத்தனை பேர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோட்டாபய ராஜபக்ஷவே அன்று தீர்மானித்தார்.

ஜானக பெரேராவின் கொலைக்கு முழுமையாக முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமே பொறுப்பு சொல்ல வேண்டும்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் ராணுவப் பாதுகாப்பும் நீக்கப்பட வேண்டும். கோட்டாபயவின் பாதுகாப்புக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதும்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் சந்தேகம் காணப்படுகின்றது.

குண்டு துளைக்காத கார் மீது 25 மீற்றர் தொலைவில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பார்களா, பயங்கரவாதிகள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை.

எனவே இந்த தாக்குதல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் திட்டமாகும்.

போர் இடம்பெற்ற காலத்தில் கூட, மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை.

ராணுவம் இன்றி தூக்கம் போகவில்லை என்றால், பொலிஸாருடன் வீதியில் இறங்கப் பயம் என்றால் முன்னாள் ஜனாதிபதி வீட்டில் இருக்க வேண்டியதுதான்.

மஹிந்த ராஜபக்ஷ ஓய்வு பெற்றுக்கொண்ட ஜனாதிபதியைப் போன்றே செயற்பட வேண்டும்.

அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டால் பொலிஸ் பாதுகாப்புத்தான் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்