உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
சிலர் கூறுவகின்றமைபோல் – பகுதி பகுதியாக தேர்தல்களை நடத்துவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்;
“உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் முடிவடைந்த பிரதேசங்களுக்கு தேர்தலை நடத்துவதுடன் எல்லை பிரச்சினை இருக்கும் பிரதேசங்களுக்கு வேறு தினத்தில் தேர்தலை நடத்தலாம் என பெப்ரல் மற்றும் சில கட்சிகள் தெரிவித்துள்ளன.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பகுதி பகுதியாக நடத்துவதில் சட்டப்பிரச்சினைகள் இருக்கின்றன. எல்லை நிர்ணய அறிக்கையை பகுதி பகுதியாக பிரிக்க முடியாது. காரணம் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை சமர்பித்த பின்னர், அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கும்போது முழு அறிக்கையையுமே பிரசுரிக்க வேண்டும்.
பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றனவா என்பதை அறிய விசரணை குழு அமைத்து, அந்த விசாரணை முடிவடைந்தவுடன் மீண்டும் அந்த அறிக்கையை திருத்தி வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும்.
எனவே பகுதி பகுதியாக தேர்தலை நடத்துவதில் சட்டப்பிரச்சினை இருப்பதால், தேர்தலை நடத்த முடியாமல் இருக்கின்றது. தேர்தலை விரைவரக நடத்துமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர்கள் என்னிடம் கேட்டனர்.
என்றாலும் அவசரப்பட்டு தேர்தலை நடத்தி மக்களின் சாபத்தை அடைய நான் தயாரில்லை. அதனால் யாரும் குறைகூறாதவகையில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு, அது தொடர்பான அறிக்கை கையளித்த பின்னர்தான் தேர்தலை நடத்த முடியும்.
அத்துடன் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினேன். அப்போது அவர், உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை பிரிக்கும்போது எந்தவொரு இன, மத மற்றும் எந்வொரு மக்கள் தொகுதிக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் செயற்படுமாறு ஆலோசனை வழங்கினார்.
எனவே, நாங்கள் எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கும்போது, நிச்சயமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் ஆலோசனைகளையும் உள்ளடக்கி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கையளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது” என்றார்.