ஒசுசல விற்பனை நிலையம் அமைப்பதில் அட்டளைச்சேனை புறக்கணிப்பு; மக்கள் விசனம்

🕔 April 8, 2016

OSUSALA - 012– மப்றூக் –

‘ஒசுசல’ எனப்படும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களை அம்பாறை மாவட்டத்தில் அமைப்பதற்கு எட்டப்பட்டுள்ள தீர்மானத்தில், அட்டாளைச்சேனைப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், அதிருப்திகளையும் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் ஒசுசல விற்பனை நிலையங்களைத் திறக்கவுள்ளதாக சுகாதார பிரதியமைச்சரும், அம்பாறை மாவட்ட மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம், சம்மாந்துறையில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டமொன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பாரிய சனத்தொகையினைக் கொண்ட அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில், ஒசுசல விற்பனை நிலையத்தினை அமைப்பது குறித்து பிரதியமைச்சர் இங்கு எதுவும் பேசவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள், பாலமுனையில் நடைபெற்ற நிகழ்வின்போது, பிரதியமைச்சர் பைசால் காசிமை சந்தித்து, ஒசுசல விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் பிரதேசங்களின் பட்டியலில், அட்டாளைச்சேனை இடம்பெறாமை குறித்து, தமது விசனங்களையும், அதிருப்திகளையும் வெளியிட்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி, முல்லைத்தீவு, சம்புநகர் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளடங்கியுள்ளமையினையும், இங்கு 45 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றமையினையும் பிரதியமைச்சரிடம் சுட்டிக்காட்டிய பொதுமக்கள், ஒசுசல விற்பனை நிலையமொன்றினை அட்டாளைச்சேனையில் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்து விபரித்தனர்.

மட்டுமன்றி, பிரதியமைச்சர் பைசால் காசிமுக்கு, அரசியல் ரீதியாக பெரும்பான்மை ஆதரவினை வழங்கும் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தினைப் புறக்கணித்து இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையானது, பிரதியமைச்சரின் அரசியலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், பிரதியமைச்சரைச் சந்தித்தவர்கள் சுட்டிக் காட்டினர்.

இதேவேளை, அரச நிறுவனங்களின் கிளைகள் மற்றும் பிராந்தியக் காரியாலங்களை அம்பாறை மாவட்டத்தில் அமைப்பதற்குத் திட்டமிடும்போது, கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் அட்டாளைச்சேனைப் பிரதேசம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும், அதனைப் போன்று பிரதியமைச்சர் பைசால் காசிமும் செயற்படக் கூடாது எனவும், அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

எனவே, அம்பாறை மாவட்டத்தில் ஒசுசல எனப்படும் அரச மருந்தகக் கூடுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களைத் திறக்கும் போது, அட்டாளைச்சேனையிலும் ஒரு விற்பனை நிலையத்தினைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பிரதே மக்கள் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிமிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்