நிகழ முடியாத அற்புதங்கள்

🕔 April 7, 2016

Article - 78 - 001
மு
ஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் முற்றிக் கொண்டே செல்கின்றன. சமாதானத்துக்கான சாத்தியங்கள் பெரிதாகத் தெரியவில்லை. சிலவேளை, முரண்பாட்டாளர்கள் ஒரு சமரசத்துக்கு வந்தாலும் கூட, கட்சியில் அவர்களுக்கிருந்த அந்தஷ்தும், இடமும் இனிக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். முரண்பாட்டாளர்களின் இழப்புக்களை எதிர்கொள்வதற்கு, மு.காங்கிரஸ் தன்னைத் தயார்படுத்தி வருகிறது.

முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் அண்மைக் காலமாக கட்சித் தலைமையுடன் முரண்பட்டு வருகின்றமை குறித்து அறிவோம். மு.காங்கிரசுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள், தங்களுக்குக் கிடைக்க வேண்டுமென மேற்படி இருவரும் எதிர்பார்த்த போதிலும், அவர்களுக்கு அவை கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கோபமும், கொந்தளிப்புமே கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கான மூல காரணம் என்று கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலையில், தேசியப்பட்டியல் விவகாரத்துடன் தன்னைத் தொடர்புபடுத்தி இனி யாரும் எழுதக் கூடாது என்று, மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலி, ஊடகங்கள் மூலம் அறிக்கையொன்றினை விடுத்துள்ளார். ‘நான் நாடாளுமன்ற உறுப்பினராகுவதைத் தடுக்கும் வகையிலான சதிகள் நடப்பதை, பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே புரிந்து கொண்டேன். எனவே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்கிற விடயத்திலிருந்து வேதனையுடன் விடைபெற்றுவிட்டேன். இனி ஒருபோதும் அந்தப் பதவியை நான் நாடப்போவதில்லை’ என்று குறித்த அறிக்கையில் ஹசனலி கூறியிருக்கின்றார்.

மு.காங்கிரசின் மறைந்த தலைவர் அஷ்ரப் கூறிய ஒரு வாசகம் மிகவும் பிரபலமானது. ‘சரியான நேரத்தில் எடுக்கப்படும் பிழையான முடிவுகளும், பிழையான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளும், இறுதியில் பிழையாகவே அமைந்து விடும்’ என்று – அஷ்ரப் அடிக்கடி கூறுவார். அதை, ஒரு தாரக மந்திரமாக, அந்தக் கட்சியினர் அடிக்கடி நினைவுகூர்ந்து பேசிக் கொள்வார்கள். மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலியின் மேற்கண்ட அறிக்கையானது, அஷ்ரப்பின் அந்த வாசகத்தினை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துகிறது. ‘தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, இனி எனக்கு வேண்டாம்’ என்கிற பொருள்பட ஹசனலி கூறியிருப்பது, பிழையான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள சரியான முடிவாகவே நமக்குத் தெரிகிறது.

மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலி 30 வருடகால அரசியல் அனுபவம் கொண்டவர். மு.காங்கிரசின் இரண்டு தலைவர்களுடனும் இணைந்து பணியாற்றியவர். அவர்களின் குணவியல்புகள் பற்றி நன்றாகத் தெரிந்தவர். ஆயினும், அண்மைய விவகாரங்களில் – மேற்சொன்ன அனுபவங்கள் எவையும் ஹசனலிக்கு கைகொடுக்கவில்லை. ஹசனலி சறுக்கி விட்டார்.

மு.காங்கிரஸ் தலைமையுடனான முரண்பாட்டுக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்கிற விவகாரம் காரணமாக இருக்கவில்லை என்று, ஹசனலி கூறியிருப்பது, மலைகளை மடுவுக்குள் மறைத்து விடலாம் என்கிற நப்பாசைக்கு ஒப்பானதாகும். உண்மையில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்கிற விவகாரம்தான் – இத்தனை பிரச்சினைகளுக்கும், முதல் மூல காரணமாகும்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இம்முறை கட்சித் தலைமை தனக்கு வழங்காது என்பதனை ஹசனலி, தனது 03 தசாப்த கால அரசியல் அனுபவத்தினூடாக அனுமானிக்கத் தவறி விட்டார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் பகரமாக, அவருக்கு வேறொரு பதவி கிடைக்கும் சாத்தியங்கள் இருந்துள்ளன. அதனைப் பெற்றுக் கொண்டு, கட்சிக்குள் தனது கௌரவத்தினைக் காப்பாற்றிக் கொள்ளும் சாணக்கியத்தினை ஹசனலி இழந்தார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் குறிவைத்து, கட்சித் தலைமையுடன் முட்டி மோதத் தொடங்கினால், தன்வசம் இருக்கின்ற செயலாளர் பதவியினையும் இழக்கும் நிலை ஏற்படும் என்பதையெல்லாம் ஹசனலி புரிந்து கொள்ள மறுத்தார். அவற்றின் விளைவுகளைத்தான் இப்போது அவர் அள்ளிக் கட்டிச் சுமக்கின்றார்.

ஆனாலும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்கிற விவகாரத்தில் முட்டிமோதத் தொடங்கினால், இப்படியெல்லாம் நடக்கும் என்பதை ஹசனலிக்கு முன்கூட்டியே பலரும் கூறிவைத்திருந்தனர். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் விவகாரமானது, ஹசனலிக்கு எவ்வாறான பிரச்சினைகளையெல்லாம் ஏற்படுத்தும் என்றும், அதனூடாக, இறுதியில் அவர் எங்கே நிறுத்தப்படுவார் என்பதையும் அலசி, ஆராய்ந்து இந்தப் பத்தியினூடாக நாம் பலமுறை எழுதி வந்துள்ளோம்.

‘எனக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தேவையில்லை’ என்று, ஆறு மாதங்களுக்கு முன்னர் ஹசனலி ஓர் அறிக்கை விட்டிருப்பாராயின், அவருக்கு எதிராக எந்தப் பிரச்சினையும் உருவெடுத்திருக்காது. ஆனால், எல்லாம் நடந்து முடிந்த பிறகு, காலம் பிந்திய நிலையில் ‘தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எனக்கு வேண்டாம்’ என்று, அவர் அறிவித்திருக்கிறார். அதனால்தான், அந்த அறிக்கையினை ‘பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு’ என்று நாம் குறிப்பிட்டுள்ளோம்.

முஸ்லிம் காங்கிரசில் ஹசனலி வகிக்கும் செயலாளர் பதவியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள. ஹசனலியிடமிருந்த மிக முக்கிய அதிகாரங்கள் பிடுங்கியெடுக்கப்பட்டு, கட்சிக்குள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உயர்பீட செயலாளர் பதவியினை வகிப்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவியினை வகிப்பவர் – நேரடி அரசியலில் ஈடுபடாத ஒருவராக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையொன்றினையும் அந்தக் கட்சி ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் நொவம்பர் மாதம் இடம்பெற்ற மு.காங்கிரசின் பேராளர் மாநாட்டின்போதுதான் இந்தத் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோர், கட்சித் தலைமையுடன் முரண்பட்டுள்ளபோதிலும், ஹசனலியுடன் சமரசமொன்றினை ஏற்படுத்திக் கொள்வதற்கு மு.கா. தலைவர் ஹக்கீம், இன்னும் தயாராக உள்ளார் போலவே தெரிகிறது. “சகோதரர் ஹசனலி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர்களில் ஒருவர். அவருடன் ஓர் இணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நடவடிக்கைகள் இன்னும் இடம்பெற்று வருகின்றன. முக்கியமான நடுவர் ஒருவரை வைத்துக் கொண்டு ஹசனலியுடன் தனித்துப் பேசுவதற்கு நாம் விரும்பியபோதும், அவரை சிலர் தனியே விடுகிறார்களில்லை” என்று, ஒலுவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் வைத்து, மு.கா. தலைவர் ஹக்கீம் கூறியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த நிகழ்வின் பின்னர் – ஹசனலிக்கு நெருக்கமான ஒருவரை, மு.கா. தலைவர் ஹக்கீம், மூடிய அறையினுள் சந்தித்துப் பேசினார். குறித்த நபர் – ஹசனலியின் சொந்த ஊரான நிந்தவூரைச் சேர்ந்தவராவார். ஹசனலியுடன் இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தும் பொருட்டு, இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முரண்பாட்டாளர்களில் மற்றொருவரான மு.காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்துடன் சமரசம் செய்து கொள்வதற்கு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தயாராக இல்லை என்கின்றனர் கட்சியின் முக்கியஸ்தர்கள். ஹசனலியுடன் இணக்கப்பாட்டுக்கு வரத் தயாராக இருப்பதாக மு.கா. தலைவர் ஹக்கீம் கூறி வருகின்ற போதிலும், கட்சியின் தவிசாளர் பஷீருடன் அவ்வாறானதொரு இணக்கப்பாட்டினை எட்டிக் கொள்வதற்குத் தயாராக இருப்பதாக எந்தவொரு இடத்திலும் தெரிவிக்கவில்லை. இன்னும் சொன்னால், பஷீருடைய பெயரினை உச்சரிப்பதிலிருந்தும் மு.கா. தலைவர் ஹக்கீம் தவிர்ந்து வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது.

இன்னொருபுறம், ஹசனலியுடன் இணக்கப்பாடொன்றினைச் செய்து கொள்வதற்கு மு.கா. தலைவர் ஹக்கீம் முன்வந்துள்ளபோதும், ஹசனலியிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்களை, மீளவும் வழங்குவதற்கு உடன்பட மாட்டார் என்றுதான் தோன்றுகிறது.

மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சாய்ந்தமருது, ஒலுவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய இடங்களில் தொகுதி வாரியாக நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் மு.கா. தலைவர் ஹக்கீமும் கலந்து கொண்டார். மு.காங்கிரசின் தலைமைக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலி மற்றும் பஷீர் ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து, பலரும் தமது அதிருப்திகளை இந்தக் கூட்டங்களில் வெளிப்படுத்தினர். அத்தோடு, மு.காங்கிரசின் அதிகாரம் கொண்ட செயலாளராகப் பதவி வகிக்கும் நபர், நேரடி அரசியலில் ஈடுபாடற்ற ஒருவராய் இருத்தல் வேண்டும் என்கிற நிபந்தனையினையில் எதுவித மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், இங்கு கருத்துத் தெரிவித்தவர்கள் வலியுறுத்தினர். அம்பாறை மாவட்டக் குழுவிலுள்ள கல்முனைத் தொகுதி அங்கத்தவர்களுக்கான கூட்டத்தில், இந்த விடயமானது ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒலுவிலில் நடைபெற்ற கூட்டத்தின்போது மு.கா. தலைவர் ஹக்கீம் பேசுகையில்; “தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக, கட்சியினுடைய நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து, இங்கு பலரும் பேசினார்கள். அவர்கள் அப்படிப் பேசியதில் எந்தவித தவறுகளும் இல்லை” என்றார். அதாவது, அங்கு கூறப்பட்ட கருத்துக்களுடன் தான் முரண்படவில்லை என்பதை, மு.கா. தலைவர் தனது பேச்சில் கோடிட்டுக் காட்டியிருந்தார். அதன்படி பார்த்தால், முரண்பாட்டாளர்கள் சிலர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என்பதையும், ஹசனலியிடமிருந்து எடுக்கப்பட்ட அதிகாரங்கள், மீளவும் அவரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிலையில், செயலாளர் ஹசனலியின் அதிகாரங்கள், அவரிடமிருந்து தவறான வழிமுறையினூடாகப் பறித்தெடுக்கப்பட்டதாகவும், அந்த அதிகாரங்களை மீளவும் ஹசனலிக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்து, மு.கா. தலைவருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் அதிகளவானோர், தமது கையொப்பங்களை வாபஸ் பெற்றுள்ளதோடு, அது தொடர்பில் ஹக்கீம் தரப்பினருக்கு சத்தியக் கடதாசிகளையும் வழங்கி வருகின்றனர். மேற்படி கடிதத்தினை மு.கா. செயலாளர் ஹசனலி தயார் செய்து, அவற்றில் மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள்கள் பலரின் கையொப்பங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னொருபுறம், செயலாளர் ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர் ஆகியோர் மு.காங்கிரசுக்கு எதிரான சதியில் ஈடுபட்டு வருவதாக, மு.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். அந்தக் கூட்டங்களில் மு.கா. தலைவர் முன்னிலையில் உரையாற்றிய கட்சிப் பிரமுகர்கள் – ஹசனலியும், பஷீர் சேகுதாவூத்தும் கட்சிக்கு எதிரான சதி முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், கட்சிக்கு எதிரானவர்களோடு கைகோர்த்துள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.

இதேவேளை, கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிளவானது, இனி ஒட்டுவதற்குச் சாத்தியங்கள் இல்லை என்று, ஒலுவிலில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து, பிரதியமைச்சர் பைசால் காசிம் கூறியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறானதொரு கருத்தினை, இதே பத்தியில் நாம் ஒருமுறை குறிப்பிட்டிருந்தோம். முரண்பாடுகளோடு தொடர்புபட்ட இரண்டு தரப்பினரும், பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கைகளையும், அதனூடாக வன்மங்களையும் போதுமான அளவு விதைத்து விட்டுள்ளனர். அதனால், இந்தப் பிளவு – ஒட்டுவதற்கான சாத்தியங்கள் மிகவும் அரிதாகவே தெரிகின்றன.

ஆயினும், சாத்தியங்களையெல்லாம் தாண்டி நிகழும் சில அற்புதங்களைப் போல், இந்த விவகாரத்தில் ஏதாவது விந்தைகள் நிகழாதா என்று ஆசைப்படுகின்றவர்களும் இல்லாமலில்லை.

அந்தளவு அப்பிராணித்தனமாக நம்மால் யோசிக்க முடியவில்லை.

நன்றி: ‘தமிழ் மிரர்’ (05 ஏப்ரல் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்