குயில்களின் சொந்தக்காரி

🕔 April 1, 2016

Article - Susheela - 01
ந்திய பின்னணிப் பாடகி பி. சுசீலா – ஒரு தடவை தெலுங்கு திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தில் அத்தனை வாத்தியக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இசையமைக்க, பாடலை பாடகர் முழுமையாக பாடுவார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும். அதுதான் அப்போதிருந்த முறைமையாகும்.

சுசீலாவைப் பாட வைக்கும் இசையமைப்பாளர் வந்திருந்தார். பாடல் இடம்பெறும் திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் சுசீலா பாடப்போகும் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் என்று, அனைவரும் ஒலிப்பதிவு செய்யுமிடத்தில் கூடியிருந்தனர். இசையமைப்பாளர் சொல்லிக் கொடுத்தது போல், குறித்த பாடலை சுசீலா பாடினார். அது – ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், சுசீலா பாடிய விதம் சரியாக அமையவில்லை என்று தயாரிப்பாளர் கூறி விட்டார். அதனால், அந்தப் பாடலை மீண்டும் பாடுமாறு இசையமைப்பாளர் கூற, சுசீலா பாடினார். அதுவும் தயாரிப்பாளருக்குப் பிடிக்கவில்லை. இப்படி அன்றைய தினம், அந்தப் பாடலை பலதடவை சுசீலா பாடி ஒலிப்பதிவு செய்தபோதும், தயாரிப்பாளர் ‘சரி’ என்று சொல்லவேயில்லை. இதனையடுத்து, சுசீலாவை ஒரு வாரம் கழித்து வருமாறு கூறினார்கள்.

மீண்டும் ஒரு வாரத்தின் பின்னர் ஒலிப்பதிவு தொடங்கியது. சுசீலா பாடினார், ஒலிப்பதிவு இடம்பெற்றது, தயாரிப்பாளருக்குப் பிடிக்கவில்லை. இப்படி 25 தடவை, அந்தப் பாடலை சுசீலா பாடி முடித்தார்.

இறுதியாக, சுசீலா பாடிய 25 ஒலிப்பதிவுகளையும் தயாரிப்பாளர் கேட்டுப் பார்த்தார். அவற்றில் சுசீலா முதலாவதாகப் பாடியது மிகவும் நன்றாக இப்பதாகச் சொன்னார். அதையே படத்தில் வைக்குமாறும் கூறினார்.

சூரியன் வானொலியில் நான் கடமையாற்றியபோது, ஒரு தடவை பாடகி பி. சுசீலாவை நேர்காணக் கிடைத்தது. அப்போது, அவர் கூறிய சம்பவத்தினைத்தான் மேலே பதிவு செய்துள்ளேன். உழைப்பும், பொறுமையுமே தனது வெற்றிகளுக்குக் காரணம் என்பதை அந்த நேர்காணலில் அவர் கூறினார். அதற்கு ஓர் உதாரணமாகத்தான் மேலுள்ள நிகழ்வினை சொன்னார்.

பாடகி, பி. சுசீலாவின் அந்த உழைப்பு – அவரை இப்போது உலக சாதனையாளராக உயர்த்தியிருக்கிறது. இந்திய மொழிகளில், உலகிலேயே அதிகமான பாடல்களை தனித்துப் பாடியவர் என்கிற புகழ் அவருக்குக் கிடைத்திருக்கிறது. பி. சுசீலாவின் இந்த சாதனையை கின்னஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

திரைப் பாடல்களில் தமிழ் மொழியை சரியாகவும், அழகாகவும் உச்சரிப்பதில் பி. சுசீலா சிறப்பானவர். இத்தனைக்கும் அவர் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர். அவர் முதலாவதாகப் பாடிய தமிழ் பாடலினை, தெலுங்கில் எழுதி வைத்துக் கொண்டுதான் பாடினாராம். எனக்கு வழங்கிய நேர்காணலில் சுசீலா அதைத் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் பாடலைக் கேட்டுப் பார்க்கும் போது, அதை நம்ப முடியாமலிருக்கும். அத்தனை அழகான உச்சரிப்புடன் அந்தப் பாடலை அவர் பாடியிருக்கின்றார்.

சுசீலா – திரைப்படங்களுக்கு எப்படிப் பாட வந்தார் என்பது, சுவாரசியம் நிறைந்த ஒரு கதையாகும். 1935 ஆம் ஆண்டு பிறந்தவர் சுசீலா. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே, அவர் முறையாகச் சங்கீதம் கற்று வந்தார். அந்தக் காலப் பகுதியில், அகில இந்திய வானொலியில் இடம்பெற்ற சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வந்தார்.

இந்த காலகட்டத்தில், இசையமைப்பாளர் பெண்டியாள் நாகேஷ்வர ராவ் தனது இசையில், புதிய குரல்களைப் பாட வைப்பதற்கு விரும்பியிருந்தார். அகில இந்திய வானொலியைத் தொடர்பு கொண்டு, தனது இசையில் பாடுவதற்கு திறமையுள்ளவர்கள் தேவையென்றும், அதற்காக சிலரை சிபாரிசு செய்யுமாறும் கேட்டிருந்தார். வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அப்போது பாடிவந்த 05 பேரின் பெயர்களை, பெண்டியாள் நாகேஷ்வர ராவுக்கு அகில இந்திய வானொலி வழங்கியது. அந்தப் பட்டியலில் சுசீலாவின் பெயரும் இருந்தது. ஐந்து பேரையும் அழைத்துப் பாட வைத்த இசையமைப்பாளர், சுசீலாவைத் தெரிவு செய்தார். இது நடந்தது 1950 ஆம் ஆண்டு. அப்போது சுசீலாவுக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது.

பெண்டியாள் நாகேஷ்வர ராவ்வின் இசையில் – ‘பெற்ற தாய்’ என்கிற தமிழ் திரைப்படம் 1953 ஆம் ஆண்டு வெளியானது. அந்தத் திரைப்படம் தெலுங்கில் ‘கன்ன தல்லி’ என்கிற பெயரில் அதே ஆண்டில் வெளிவந்தது. அந்த வகையில் தமிழிலும், தெலுங்கிலும் சம காலத்தில் சுசீலா அறிமுகமானார். பெற்ற தாய் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு’ என்கிற பாடல் பி. சுசீலா பாடிய முதல் தமிழ் பாடலாகும். அது ஒரு டூயட் பாடல். ஏ.எம். ராஜாவுடன் இணைந்து அந்தப் பாடலை சுசீலா பாடினார். தெலுங்கில் கண்டசாலாவுடன் ஜோடியாகப் பாடியிருந்தார். பாடல் காட்சியில் ரி.டி. வசந்தா தோன்றி உதடசைத்து நடித்தார். அவருக்கு ஜோடியாக எம்.என். நம்பியார் அந்தப் பாடலில் நடித்திருந்தார்.

இப்படி ஆரம்பித்த சுசீலாவின் இசைப் பயணம்தான் இன்று உலக சாதனையாக மாறியிருக்கிறது.

சுசீலா – ஆந்திராவைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் புலபக முகுந்தராவ். கணவர் மோகன்ராவ் ஒரு வைத்தியர். மகன் – ஜயகிருஷ்ணா. மகனின் மனைவி பெயர் சந்தியா. இவரும் ஒரு பாடகியாக தமிழில் அறியப்பட்டவர். மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ‘பூங்கொடியின் புன்னகை’ என்கிற பாடல் மூலம், அவர் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

ஏராளமான மொழிகளில் பி. சுசீலா பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

அதேபோன்று, ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையிலும் பி. சுசீலா பாடியுள்ளார். இருந்தபோதிலும், ‘நீங்கள் பணியாற்றியவர்களில், உங்களை கடுமையாக உழைக்க வைத்த இசையமைப்பாளர் யார்’ என்று, என்னுடைய நேர்காணலில் சுசீலாவை கேட்டிருந்தேன். அதற்கு அவர் இரண்டு இசையமைப்பாளர்களின் பெயர்களைக் கூறினார். ஒருவர் எம்.எஸ். விஸ்வநாதன். மற்றையவர் பெண்டியாள் நாகேஷ்வர ராவ்.

“இவர்கள் இருவரும், ஒரே பாடலை அதிக தடவை பாட வைத்து ஒலிப்பதிவு செய்து கொள்வார்கள். ஒரு முறை இசையமைப்பாளர் எம்.எஸ். விவ்வநாதனின் இசையில், ஒரு பாடல் ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தேன். இரவு 10 மணிக்கு பாடல் ஒலிப்பதிவை எம்.எஸ்.வி. ஆரம்பித்தார். காலை 6.00 மணி வரையில் என்னைப் பாட வைத்துக் கொண்டேயிருந்தார்” என்று, எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் பாடிய அனுபவமொன்றினையும் நம்முடன் பி. சுசீலா பகிர்ந்து கொண்டார்.

பாடகர் ரி.எம். சௌந்தராஜன் ஏராளமான நடிகர்களுக்காகப் பாடியிருக்கின்றார். ஆயினும், அவரின் பாடல்களை திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக, அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்தியவர் சிவாஜிகணேசன்தான் என்று ஒருமுறை ரி.எம். சௌந்தராஜனே கூறியிருந்தார். அதுபோல, உங்கள் பாடல்களுக்கு திரையில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியவர் யார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என, பி. சுசீலாவைக் கேட்டபோது, “சாவித்திரி” என்றார்.

பி. சுசீலாவின் இசைப் பயணம் மிகவும் நீண்டது. 40 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் திரைப்படங்களில் பாடிக்கொண்டிருந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வரையில் அவரின் பயணம் தொடர்ந்தது. இதன்போது அவருக்குக் கிடைத்த வெற்றிகளும், அவர் பெற்றுக் கொண்ட அடைவுகளும் ஏராளமானவையாகும். சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகிக்கான இந்தியாவின் தேசிய விருதினை பி. சுசீலா 05 தடவை பெற்றுள்ளமை இங்கு குறித்துச் சொல்லத்தக்கதாகும். 1969 ஆம் ஆண்டு, ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ என்கிற பாடலைப் பாடியமைக்காக பி. சுசீலாவுக்கு முதலாவது தேசிய விருது கிடைத்தது. தமிழில் முதலாவதாக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது வென்ற பெருமையும் பி. சுசீலாவுக்கு உரித்தானதாகும். இரண்டாவது தேசிய விருதினை 1971 ஆம் ஆண்டு ‘சவாலே சமாளி’ திரைப்படத்தில் பாடிய ‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு’ என்கிற பாடலுக்காகப் பெற்றார். பின்னர் 1978, 1982 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தெலுங்கு திரைப்படங்களில் பாடியமைக்காக பி. சுசீலாவுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.

இதுவரையில் திரைப்படங்களிலும், தனியான அல்பங்களுக்காகவும் என்று 40 ஆயிரம் பாடல்களை தனித்தும், ஜோடியாகவும் பி. சுசீலா பாடியிருக்கின்றார். தனியாக மட்டும் 17 ஆயிரத்து 695 பாடல்களைப் பாடியுள்ளார். இந்தத் தனிப்பாடல் எண்ணிக்கைதான் அவரின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிய வைத்துள்ளது.

இத்தனை பாடல்களைப் பாடியுள்ள சுசீலாவிடம், ‘நீங்கள் பாடிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள் சிலவற்றினைக் கூறுங்கள்’ என்று கேட்டபோது, அவரின் பட்டியல் இவ்வாறு அமைந்தது.
• மன்னவன் வந்தானடி தோழி (படம்: திருவருட் செல்வர்)
• மாலைப் பொழுதின் மயக்கத்திலே (படம்: பாக்கிய லக்ஷ்மி)
• நெஞ்சம் மறப்பதில்லை (படம்: நெஞ்சம் மறப்பதில்லை)
• இதய வீணை தூங்கும் போது (படம்: இருவர் உள்ளம்)

இப்போதுள்ள பல புகழ்பெற்ற ஆண் பாடகர்கள் ஒரு காலத்தில் பி. சுசீலாவுடன் அறிமுகப் பாடகர்களாகவும்,, இளைய பாடகர்களாகவும் இணைந்து பாடியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் ‘சாந்தி நிலையம்’ திரைப்படத்தில் ‘இயற்கையெனும் இளைய கன்னி’ பாடலைப் பாடியதன் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கு முன்பாகவே தெலுங்கில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிமுகமாகியிருந்தார். தமிழுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் அறிமுகம் செய்தார். இயற்கையெனும் இளைய கன்னி பாடலை பி. சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடினார். அந்த அனுபவத்தை பி. சுசீலா இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

“எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாந்தி நிலையம் திரைப்படத்துக்காக என்னுடன் பாடியபோது அவர் இள வயதுக் குரலினைக் கொண்டிருந்தார். அவரின் குரலில் முதிர்ச்சி இருக்கவில்லை. அப்போது அவரின் குரலுக்கு ஏற்றால் போல் என்னுடைய குரலின் தன்மையினை மாற்றிப் பாட வேண்டியிருந்தது. அதனால், ஒலிவாங்கிக்கு சற்று தூரமாக நின்று நான் பாடினேன். அப்போதெல்லாம் என்னுடன் பாடுவதற்கு எஸ்.பி. பாலசுப்ரமனியம் பயப்படுவார். அவர் மிகவும் மரியாதையானவர், நல்லவர். இப்போது, அவருடன் பாடுவதற்கு எனக்கு பயமாக உள்ளது. அந்தளவு அவர் வளர்ந்து விட்டார்” என்கிறார் சுசீலா.

இசை எங்கிருந்து வருகிறது என்கிற கேள்விக்கு ஏராளமான பதில்கள் உள்ளன. ஆனாலும், பி. சுசீலாவிடமிருந்துதான் அநேகருக்கு இசை வந்து சேர்ந்திருக்கிறது.

மயிலிறகால் வருடும் சுகம் – சுசீலாவின் பாடல்களில் இருக்கின்றன.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (31 மார்ச் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்