பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு
🕔 March 28, 2016
பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதலில் இதுவரை 69பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 412 போருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயினும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லாகூரிலுள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று மாலை ஏராளமான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது குழந்தைகளுடன் கூடியிருந்தபோது, மாலை 6.40 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர், தனது உடலில் 10 முதல் 15 கிலோகிராம் எடையுள்ள வெடிபொருட்களை சுமந்து வந்திருந்தாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே உயிர்ச்சேதம் அதிகமாக இருந்ததாக, பொலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
20 வயதையுடைய ஒருவரே, இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரியொருவர் கூறினார்.
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சுவதாகவும் பஞ்சாப் மாகாண அமைச்சர் பிலால் யாசின் சர்வதேச ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
தலிபான் பொறுப்பு
லாகூர் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தலிபான் இயக்கத்தின் துணை அமைப்பான ஜமாத் உல் – அரார் பொறுப்பேற்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தினரை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பூங்காவில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாக உள்ளனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல்கள் நிறைந்த பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் குழுந்தைகள்தான் குறிவைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதேவேளை, இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் சரீப் வன்மையாகக் கண்டித்துள்ளார். நவாஸ் சரீப் – லாகூரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.