பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், சதுர சேனாரத்ன MP க்கு எதிராக வழக்கு

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன கடந்த வருடம் ராகமையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த தனது ஆதரவாளர்களை பார்வையிடுவதற்காக ராகம பொலிஸ் நிலையம் சென்றிருந்தார்.
அதன்போது கடமையில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் நாடாளுமன்ற உறுப்பினரை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டிருந்ததுடன், தகாத வார்த்தைகளையும் பிரயோகித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
இதனையடுத்து ராகம பொலிசாரும், சதுர சேனாரத்ன தங்களை அச்சுறுத்தியதாக முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.
அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சதுரவின் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், ராகம பொலிசாரின் முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் நடைபெற்றன.
தற்போது ராகம பொலிசார், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் – நாடாளுமன்ற உறுப்பினர் சதுரவுக்கு எதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஏற்கெனவே பிணை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதுர சேனாரத்ன – சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வராவார்.