பெருமை பேசுதல்

🕔 March 25, 2016

Article - A.R. Mansoor - 0001
ப்படிப் பார்த்தாலும், 70 வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. கல்முனை பிரதேசத்தின் பிரபல்யமான அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்பட்ட எம்.எஸ். காரியப்பர் – அப்போது ஒரு கார் வாங்கியிருப்பதாக ஊருக்குள் பரவலான கதை. காரினைப் பார்ப்பதற்கு ஆட்கள் ஆசையோடு அலைமோதிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவர் கூட்டமும் காரினைப் பார்க்கச் சென்றது. காரினைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஆசையாக இருந்தாலும், அந்தச் சிறுவர்களால் முடியவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு 13 வயதுச் சிறுவன், அந்தக் காரினைத் தொடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, காரினை தொட்டுப் பார்த்தார். இதைக் கண்ட காரியப்பரின் ஆட்கள், அந்தச் சிறுவனைப் பிடித்து மரத்தில் கட்டிப்போட்டு விட்டார்கள். பிறகு சிறுவனின் உறவினர்கள் சென்று பேசிக் கதைத்துத்தான் சிறுவனைக் காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், அந்தக் காரின் உரிமையாளரான எம்.எஸ். காரியப்பரின் மகளையே அந்தச் சிறுவன் பின்னாளில் திருமணம் செய்து கொண்டார்.

அந்தச் சிறுவனுக்கு ஏ.ஆர். மன்சூர் என்று பெயர். ஒரு சட்டத்தரணியாக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக பின்னாளில் – ஏகப்பட்ட பதவிகளை வகித்து, அவர் புகழ்பெற்றார்.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி பிறந்தவர். 83 வயதாகிறது. ஆனாலும் வயதை மீறிய உற்சாகத்தோடு இருக்கிறார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – முன்னாள் அமைச்சர் மன்சூரை, கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை 20 ஆம் திகதி, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, இரண்டு நபர்கள் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். ஒருவர் முன்னாள்அமைச்சர் ஏ.ஆர். மன்சூர். மற்றவர், ஓய்வுபெற்ற பேராசிரியர் சரத் விமல பண்டார கொட்டாகம என்பவர்.

இந்தக் கௌரவம் – ஒரு முன்னாள் அமைச்சர் என்கிற அடையாளத்துக்காக மட்டும் மன்சூருக்கு வழங்கப்படவில்லை. அவருடைய அர்ப்பணிப்பான சேவைக்காகவும், குறிப்பாக – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக, அவர் செய்த பெரும் பங்களிப்புக்காகவும் இந்த கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலில் இருந்து மன்சூர் ஒய்வாக இருந்த காலப் பகுதியில், 2002 ஆம் ஆண்டு, குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி மூலமாக, தனது நாட்டுக்கும் சமூகத்துக்கும் ஏராளமான பணிகளை மன்சூர் செய்தார். குறிப்பாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக குவைத் நாட்டிடமிருந்து 1500 மில்லியன் ரூபாவினை, தான் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில் மன்சூர் பெற்றுக் கொடுத்தார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இற்றை வரையிலான காலப்பகுதியில், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஒரே தடவையில் கிடைத்த மிகப்பெரும் நிதியுதவி இதுவேயாகும்.

முன்னாள் அமைச்சர் மன்சூருக்கு அரசியலில் ஒரு பெயர் இருக்கிறது. கறை படியாத கரங்களைக் கொண்டவர் என்று அவரை அழைப்பார்கள். அரசியலில் சேவை செய்வதற்காக, அடுத்தவரிடம் இவர் – காசு வாங்கியதாக கதைகள் கிடையாது. மன்சூர் – கறைபடியாத கரத்தைக் கொண்டவர் என்பதை, அவருடைய அரசியல் எதிராளிகளே ஏற்றுக் கொண்டிருகின்றார்கள்.

“என்னுடைய தந்தை அர்ப்பணிப்புடைய ஓர் அரசியல்வாதியாக இருந்தார். கல்முனைப் பிரதேசத்தையும், அந்தப் பிரதேச மக்களையும் அவர் – தனது கண்களாக நேசித்தார், நேசிக்கின்றார். ஆனால், பிள்ளைகள் விடயத்தில் அந்தளவு அப்பணிப்புடன் இருக்கவில்லை. எங்களின் தாயார்தான் எங்கள் விடயத்தில் அர்ப்பணிப்புடன் இருந்தார். எங்கள் தந்தையார் பிள்ளைகளின் விடயத்தில் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். எல்லா விடயங்களிலும் ஒழுக்கம் பார்ப்பார். ஒழுக்கத்துக்கு இன்னொரு பெயர் என்றால் – அது எனது தந்தை மன்சூர்தான்” என்கிறார், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் புதல்வரான ரஹ்மத் மன்சூர்.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய இணைப்புச் செயலாளராக ரஹ்மத் மன்சூர் பணியாற்றுகின்றார்.

“உங்கள் வாப்பா பற்றி ஒரு கட்டுரை எழுதப் போகிறேன். அவர் பற்றிய சுவாரசியமான விடயங்களைக் கூறுங்கள்” என்று, சகோதரர் ரஹ்மத் மன்சூரிடம் கேட்டோம். தந்தை பற்றிய, பழைய நினைவுகள் பலவற்றினைப் பகிர்ந்து கொண்டார்.

“தன்னுடைய பிள்ளைகளின் படிப்பு விடயத்தில், என் தந்தையார் மிகவும் கவனமாகவும், கறாராகவும் இருந்தார். விளையாடுவதற்கு, பொழுது போக்குவதற்கென்று எங்களை வெளியே போக அனுமதிக்க மாட்டார். இதேவேளை, பிள்ளைகளுடன் அவர் சொல்லிக் கொள்ளும் வகையில் பொழுது போக்கியதும் கிடையாது.

எனது தந்தை மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். அவரிடம் நான் பல தடவை அடிவாங்கியிருக்கிறேன். ஆனாலும் – உள்ளுக்குள் அவர் மிகவும் உணர்வுபூர்வமானவராக இருந்தார். சின்ன விடயங்களுக்கும் அழுது விடுவார்” என்று அவருடைய மகன் ரஹ்மத் மன்சூர் கூறினார்.

‘மன்சூர்’ என்பது அறபு மொழிச் சொல். புனித குர்ஆனிலும் மன்சூர் என்று வருகிறது. மன்சூர் என்றால் ‘இறைவனின் ஆதரவினைப் பெற்றவர்’ என்று அர்த்தமாகும்.

மன்சூரின் அரசியல் வாழ்க்கை தோல்வியுடன்தான் ஆரம்பமானது. 1965 ஆம் ஆண்டு, நகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். ஆனாலும், 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கல்முனைத் தொகுதி சார்பாக ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு, வெற்றிபெற்ற அவர் – நாடாளுமன்ற உறுப்பினரானார். இதனையடுத்து, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன – மன்சூரை யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராக நியமித்தார்.

மன்சூருக்கு 03 பிள்ளைகள் முதலாமவரும், கடைசியும் பெண்கள். நடுவில் மகன் ரஹ்மத் மன்சூர்.

மன்சூர் – தனது 26ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருடைய மனைவிக்கு 18 வயது. மனைவியின் பெயர் சஹ்ரா. இவர் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். காரியப்பரின் 05ஆவது மகள்.

“தந்தையின் திருமணம் பேசிக் கதைத்து – ஒரு ஏற்பாட்டுத் திருமணமாகத்தான் நடந்ததாம். ஆனாலும், திருமணத்துக்கு முன்பாகவே உம்மா மீது எனது தந்iதாயாருக்கு காதல் இருந்திருக்கிறது. இளமைக் காலத்தில் எனது தந்தை நல்ல விளையாட்டு வீரர். நன்றாக உயரம் பாய்வாராம். நாங்கள் பெரியவர்களான பிறகு, எங்கள் தந்தையின் விளையாட்டுத் திறமை பற்றிய கதைகளை, அவரும் உம்மாவும் இருக்கத்தக்கதாக பேசிக்கொள்வோம். அப்போது உம்மா, எங்கள் தந்தையாரின் பல சுவாரசிய விடயங்களைப் போட்டுடைப்பார். அந்தக் காலத்தில் திருமணத்துக்கு முன்னதாக, எங்கள் தாயாரைப் பார்ப்பதற்கு, எங்களின் தந்தையார் சுவர் ஏறிக் குதித்த கதைகளையெல்லாம், எங்கள் தாயார் பகிடியாகச் சொல்வார். எங்கள் தந்தையாரின் உயரம் பாய்தல் எப்படியெல்லாம் பயன்பட்டிருந்தது என்பதை உம்மா சொல்லிச் சிரிப்பார்” என்று சொல்லும் ரஹ்மத் மன்சூரிடம், அவரின் தந்தை பற்றிய ஏராளமான சுவாரியக் கதைகள் உள்ளன.

ஏ.ஆர். மன்சூரை, ஓர் அரசியல்வாதியாகத்தான் அநேகர் அறிவர். ஆனால், அவர் ஒரு சட்டத்தரணியும் கூட. புகழ்பெற்ற சட்டத்தரணி ஜீ.ஜீ. பொன்னம்பலத்திடம் தொழில் கற்றிருந்தார். ஒரு நீதியரசராக வரவேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது. ஆனால், காலம் அவரை வேறு திசையில் திருப்பி விட்டது.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர், அவருடைய பிள்ளைகளிடம் கண்டிப்பானவராக இருந்தாலும் கூட, தனது பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் அவர் அலாதியாக நேசிப்பவராகவும் இருந்துள்ளார். அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்வம் அதற்கு நல்லதோர் உதாரணமாகும்.

முன்னாள் அமைச்சர் மன்சூருக்கு புகைக்கும் பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கத்தினைக் கைவிடுமாறு அவரின் உறவுகள் பலமுறை கூறியும், அவர் நிறுத்தவில்லை. இந்த நிலையில், மன்சூரின் மூத்த மகளுக்கு பிள்ளை கிடைத்தது. பேரப் பிள்ளையை அள்ளிக் கொஞ்சும் ஆசையில், மன்சூர் குழுந்தையைத் தூக்கப் போனார். ஆனால், அவரின் மூத்த மகள் தனது பிள்ளையை கொடுக்க மறுத்து விட்டார். “நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் மட்டும்தான் எனது பிள்ளையை, உங்களிடம் தருவேன்” என்றார். அன்றிலிருந்து, தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைக்காக, தனது நீண்டநாள் புகைத்தல் பழகத்தினை அவர் கைவிட்டு விட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பும், ஏ.ஆர். மன்சூரும் அம்பாறை மாவட்டம் கல்முனையில் பிறந்தவர்கள். ஆனால், அரசியலில் இருவரும் எதிர் எதிர் முகாம்களைச் சேர்ந்தவர்கள். மிகக் கடுமையான எதிரிகளாகவும் இருந்தனர். ஆனால், அரசியலை விட்டு மன்சூர் ஒதுங்கியிருந்த காலங்களில், அவருக்கும் மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்புக்கும் இடையில் பகைமை விலகி, உறவு மலர்ந்தது.

ரஹ்மத் மன்சூடைய திருணம் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் நடந்தது. அரசியல் ரீதியாக அஷ்ரப்புடன் தனது தந்தையார் மன்சூர் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த போதும், அஷ்ரப்புடன் ரஹ்மத் மன்சூர் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தார். அதன் காரணமாக, தனது திருமணத்துக்கு அஷ்ரப்பை ரஹ்மத் மன்சூர் அழைத்தார். அஷ்ரப்பும் ரஹ்மத் மன்சூரின் திருமணத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அஷ்ரப்பும் முன்னாள் அமைச்சர் மன்சூரும் சந்தித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் கட்டியணைத்து சலாம் கூறிக் கொண்டார்கள். அதுவரை காலமும், இருவருக்குமிடையில் இருந்து வந்த அரசியல் பகைமை, அந்த சந்திப்போடு இல்லாமல் போனது. முன்னாள் அமைச்சர் மன்சூரை, ‘காக்கா’ என்றுதான் மு.கா.வின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அழைப்பார். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமக்கு மூத்த சகோதரர்களை ‘காக்கா’ என்றுதான் கூறுவர்.

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பையும், தென்கிழக்குப் பல்லைக்கழகம் – கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்தது. அஷ்ரப் – தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் ஸ்தாபகர் ஆவார்.

இப்போது, அந்தப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்திருக்கிறது.

முன்னாள் அமைச்சர் மன்சூரைப் பாராட்டியதன் மூலம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பெருமைப்பட்டுள்ளது.

சில பெருமைகள் பற்றி – கர்வத்தோடு பேசிக் கொள்ள முடியும்.

அதை – இந்தக் கட்டுரை நிறைவேற்றியிருக்கிறது.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (24 மார்ச் 2016)A.R. Mansoor - 03A.R. Mansoor - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்