ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல்
ராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போன ராணுவத்தளபதி பொன்சேகா, நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என எவ்வாறு கூற முடியும் என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
ரக்னா லங்கா மற்றும் அவன்காட் நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில், பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் கோட்டா ஆஜராகியிருந்தார்.
விசாரணைகளின் நிறைவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்தக் கேள்வியினை எழுப்பினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்;
“புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை ஒரு தனிபரோ அல்லது சிலரோ வெற்றிகொள்ளவில்லை.
சரத்பொன்சேகா ராணுவத் தளபதியாக இருந்தபோது, ராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போனது. அவ்வாறானவர் நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என எவ்வாறு கூறலாம்.
யுத்தத்தைக் நிறைவடையச் செய்ய விமானப்படை, கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை உள்ளிட்டோர் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்த நிலையில், இவற்றை எல்லாம் மறந்து, ஒருவர் மாத்திரம் இதனைச் செய்தார் என்று கூறுவது எப்படி” என்றார்.