கலாசாரங்களை அனாச்சாரமாகக் காணுவோர், கிணற்றுக்குள் வாழவே தகுதியானவர்கள்: யஹ்யாகான்

🕔 March 25, 2016

Yahyakhan - 098“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில், பல்லின சமூகங்களின் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றியமையினை அனாச்சாரமாகக் காணுகின்றவர்கள், கிணற்றுக்குள் தனித்து வாழ்வதற்கு மட்டுமே தகுயானவர்கள்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார்.

பல்லினங்கள் வாழுகின்றதொரு நாட்டில், அதுவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்ட மு.காங்கிரசின் தேசிய மாநாட்டில், அனைத்த்து சமூகங்களின் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்வுகளை அரங்கேற்றியமையானது, தேசிய நல்லிணக்கத்திலுள்ள ஈடுபட்டினை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மு.காங்கிரசின் தேசிய மாநாட்டில் பல்லின சமூகங்களின் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றியமையானது, அனாச்சாரமானதொரு நடவடிக்கை என்று ஊடகங்களில் நபரொருவர் தெரிவித்துவரும்  குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்கண்ட கருத்தினை யஹ்யாகான் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மு.காங்கிரசின் தேசிய மாநாட்டில் பல்லின சமூகங்களின் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றியமையாது, அனாச்சாரமானதொரு நடவடிக்கை என்று, தனியாளாகக் கட்சி நடத்தும் ஒருவர் அண்மையில் ஊடகங்கள் மூலம் குற்றம் சாட்டி வருகின்றார். இது கோமாளித்தனமான ஒரு குற்றச்சாட்டாகும். பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில், அவர்களின் கலாசார விழுமியங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் – கிணற்றுக்குள் சென்று, தனித்து வாழ்வதற்கே லாயக்கானவர்களாவர்.

மு.காங்கிரசின் தேசிய மாநாட்டில் பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தைக் கண்டு கலவரப்பட்டவர்கள்தான், மாநாடு குறித்து எதையாவது குறையாகச் சொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில், இவ்வாறு உளறிக் கொண்டு திரிகின்றனர். ஆனால், இவ்வாறான உளறல்கள் ஒருபோதும் எடுபடாது.

நமது கலாசாரங்களை மற்றைய சமூகத்தவர்கள் மதிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள், மற்றைய சமூகத்தவர்களின் கலாசாரங்களை மதித்து நடக்கப் பழக வேண்டும். அப்போதுதான் பரஸ்பரம் நல்லுறவும், நல்லிணக்கமும் உருவாகும். இதைக்கூட புரிந்து கொள்ள முடியாமல், ஏதாவது பிழை சொல்ல வேண்டும் என்பதற்காக, மு.காங்கிரசின் தேசிய மாநாட்டில் அனாச்சாரம் நடைபெற்றதாகக் கூறுவதானது, சிலக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலின் வெளிப்பாடு மட்டும்தான்.

ஆலமரமாய் உயர்ந்து நிற்கும் மு.காங்கிரசின் வளர்ச்சியில், இவ்வாறான வெற்றுக் குற்றச்சாட்டுக்கள் எதையும் நிகழ்த்தி விடப்போவதில்லை. மாறாக, இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களைத்தான் மக்களிடத்தில்ட கோமாளிகளாக அடையாளம் காணப்படுவர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்