அதிபரின் அலட்சியத்தால், வாய்ப்பிழந்த மருதமுனை மாணவி: கல்விப் பணிப்பாளரிடம் முறையீடு

🕔 March 21, 2016

Girl - 01– மப்றூக் –

மாவட்ட மட்ட தமிழ் மொழி தினப் போட்டியில் கலந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்த மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவி ஒருவருக்கு, போட்டி நடைபெறும் தினம் பற்றிய தவறான தகவலை கல்லூரியின் அதிபர் வழங்கியமையினால், குறித்த போட்டியில் சம்பந்தப்பட்ட மாணவி கலந்து கொள்ளும் வாய்ப்பினை இழந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையான எம். முஸாஹிர் என்பவர், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜெலீலிடம் இது குறித்து எழுத்து மூலம் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது;

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் ஜசிறா சனா எனும் மாணவி, இவ்வருடம் நடத்தப்பட்ட தமிழ் தினப் போட்டியில் கலந்து கொண்டு, கோட்ட மட்டத்தில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து இந்த மாணவிக்கு மாவட்ட மட்ட தமிழ் தினப் போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்து.

இதனையடுத்து, மாவட்ட மட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு குறித்த மாணவி, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம். ஹிர்பஹான் என்பவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20ஆம் திகதி), மேற்படி மாணவியின் தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாவட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகள் இன்று திங்கட்கிழமை (21ஆம் திகதி) அட்டாளைச்சேனையில் இடம்பெறவுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மாணவியை அங்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார்.

இதன்பிரகாரம், மேற்படி மாணவியின் தந்தை, தன்னுடைய மகளை, பாடசாலை ஆசிரியை ஒருவருடன் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து, முச்சக்கர வண்டியொன்றில் இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனைக்கு அனுப்பி வைத்தார்.

அட்டாளைச்சேனையில் தமிழ் மொழி தினப் போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு, மாணவியும் அவரின் ஆசிரியையும் வந்தபோது, அறிவிப்புச் செய்யப்பட்ட மேற்படி மாவட்டப் போட்டியானது நேற்று ஞாயிற்றுக்கிழமையே நடந்து முடிந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனால், கவலையும் வேதனையுமடைந்த மேற்படி மாணவியின் தந்தை, தனது மகளை அழைத்துக் கொண்டு சென்று, அல் மனார் மத்திய கல்லூரியின் அதிபர் ஹிர்பஹானிடம் நியாயம் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அல் மனார் மத்திய கல்லூரியின் அதிபர், உரிய முறையில் பதிலளிக்காமல் மாணவியின் தந்தையை அலட்சியம் செய்து அனுப்பி விட்டதாகவும், இதனையடுத்து மேற்படி மாணவியின் தந்தை எம். முஸாஹிர் என்பவர், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜெலீலிடம் நடந்த விடயங்களைத் தெரிவித்து எழுத்து மூலம் இன்று திங்கட்கிழமை முறையிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தெரிவிக்கையில்; “நான் கூலித் தொழில் செய்து பிள்ளையைப் படிக்க வைத்து வருகிறேன். என்னுடைய மனைவி நூல் நெய்து, அதினூடாகப் பெற்ற பணத்தில்தான், எனது மகளை தமிழ் தினப் போட்டி நடைபெறுவதாகக் கூறப்பட்ட அட்டாளைச்சேனைக்கு முச்சக்கர வண்டியில் அனுப்பி வைத்தோம். எனது மகள் கல்வி கற்கும் பாடசாலை அதிபர் வழங்கிய தவறான தகவலால், எனது மகளுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் நான் முறையிட்டபோது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். அந்த நடவடிக்கையானது எனது மகளுக்கு தமிழ் மொழி தின மாவட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதாக இருக்க வேண்டும்” என்றார்.

Comments