மு.கா.விலிருந்து இரண்டு மௌலவிகள் இடை நிறுத்தம்; தலைமைக்கு எதிரான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

🕔 March 19, 2016

Suspended - 01– மப்றூக் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் இருவர், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கண்டியைச் சேர்ந்த இல்லியாஸ் மௌலவி மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த கலீல் மௌலவி ஆகிய இருவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவிக்கும் கடிதம், இன்று பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டதாக மு.கா.வின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

மு.காங்கிரஸ் தலைமைக்கு எதிரான சதித் திட்ட நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டிலிலேயே இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிரான சதித் திட்டமொன்று கொழும்பில் வைத்து தீட்டப்பட்டுள்ளது. இதில் மேற்குறிப்பிட்ட இருவரும் கலந்து கொண்டமைக்கான ஆதாரம், கட்சித் தலைவருக்குக் கிடைக்கப் பெற்றமையினை அடுத்து, இவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று சனிக்கிழமை பாலமுனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்; முஸ்லிம் காங்கிரசிலிருந்து இருவரை நேற்றிரவு இடைநிறுத்தியுள்ளதாகக் கூறினார்.

ஆயினும், இடைநிறுத்தப்பட்ட நபர்களின் பெயர்களை ஹக்கீம் மேடையில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் ஆகியோரைத்தான் இடைநிறுத்தியுள்ளதாக, சில ஊடகங்கள் அனுமானத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்