தற்போதைய தேர்தல் முறைமையினூடாக பணக்காரர்களே நாடாளுமன்றம் வருகின்றனர்: ஜனாதிபதி

🕔 June 8, 2015

President - 011– அஷரப் ஏ. சமத் –

ஜே. ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்த – தற்போதைய தேர்தல் முறைமையினால்,  பணக்காரர்களும், சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பவர்களுமே அதிக நன்மையடைகின்றனர்.  எதிர்காலத்திலும் இவ்வாறனவர்களே நாடாளுமன்றத்தில் நிரம்பிவிடுவார்கள். இவ்வாறானவர்கள், தமது பணத்தை வீசி,  நாடாளுமன்றம் வந்து விடுவார்கள்.  இதன் காரணமாக,  படித்தவர்களும், மக்களுக்கு தம்மை அர்ப்பணிக்கும் தொழிற்சங்கவாதிகளும் , கல்விமான்களும் பாராளுமன்றத்திற்கு போக முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட சம்மேளனக் கூட்டம் இன்று திங்கட்கிழமை, கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிவல் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;

பொலநறுவை மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் நான் போட்டியிட்டேன். அப்போது,  எனக்கு 01 லட்சம் ரூபாய்தான் தேர்தல் செலவாகியது. அந்தத் தேர்தலில் முதன் முதலாக நாடாளுமன்றம் சென்றேன். ஆனால் அதன் பிறகு – ஜே. ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்த – தற்போதைய தேர்தல் முறைமையினால்,  பணக்காரர்களும், சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பவர்களுமே அதிக நன்மையடைகின்றனர்.

இன்று மாலை நடைபெறும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், ஒரேயொரு அமைச்சரவைப் பத்திரம் மட்டுமே சமர்ப்பிக்கப்படும். அது 20ஆவது  அரசியலமைப்புத் திருத்தம்  தொடர்பானதாகும்.

இன்று எனது தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எவ்வாறேனும் அந்தப் பத்திரத்திரத்துக்கான அனுமதியைப் பெறுவேன்.

அதன் பின்னர், ஒரு வாரத்திற்குள் இச் சீர்சிருத்தம் நாடாளுமன்றத்தில சமர்ப்பிக்கப்படும். அதன்போது, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து, கைகளை உயர்த்தி  – இந்த அரசியல் திருத்தத்தினை அங்கீகரிக்க வேண்டும்.

இருபதாவது அரசியலமைப்பு தேர்தல் திருத்தத்தை அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி முன்னெடுப்பதானது, மறைந்த எமது கட்சித் தலைவர்கள் எஸ்.டபள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு, நாம் செய்யும் கைங்கரியமாகும்.

இந்த நாட்டில் கடந்த 33 வருடங்களாக இருந்து வரும் தேர்தல் முறையிலுள்ள, விருப்பு வாக்கு முறை மற்றும்  மாவட்ட தேர்தல் முறைகளை ஒழித்துக் கட்டுவதற்கே நான் முயற்சிக்கின்றேன். இதனையே ஜனாதிபதி தேர்தலின்போது குறிப்பிட்டிருந்தேன்.   இதனை நாம் அமுல் படுத்தாது விட்டால்,  எதிர்கால சமுதாயத்தினர் எம்மை சாபமிடுவார்கள்.

நாடாளுமன்றத்தில் 19 ஆவது சீர்திருத்தத்தை எவ்வாறு நீங்கள் அமுல்படுத்தினிர்களோ, அவ்வாறே – 20 ஆவது சீர்திருத்தத்துக்காகவும் – ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களியுங்கள்.  ரணில் விக்ரமசிங்க தலைமையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து 3-2  பெரும்பான்மையுடன் இதை  அமுல்படுத்துங்கள்.

எவருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில், 20 ஆவது சீர்திருத்தத்தினை அரசியல் அறிஞர்கள் வரைந்துள்ளனர். இந்த நாட்டில் வாழும் தமிழர், பௌத்தர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மலாயர் என்று எவருக்கும் இதனூடாக அநீதியிழைக்கப்பட மாட்டாது. இச் சீர்திருத்தத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்புகள் ஏற்படுமானால்,  அவர்களுக்கு தேசிய பட்டியல் மூலமாக பிரதிநிதித்துவம் வழங்கப்படும். விருப்பு வாக்கு முறையின் கீழ் –  மாவட்ட ரீதியாக வாக்குகளைத்  தேடி அலைந்து, வீண் விரயம் செய்யாமல், வேட்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் தமது சேவையை செய்யக் கூடிய வகையில் – இத் தேர்தல் முறைமை அமைந்துள்ளது.

இருபதாவது அரசியல் சீர் திருத்தத்துக்கு  எதிராக – செயற்படுகின்றவர்கள் தொடர்பில்,  மக்கள் முன் பிரசாரப்படுத்தப்படும்” என்றார்.

இந் நிகழ்வில் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுர பிரியாதர்சன யாப்பா, டி.யு.குணசேகர, திலங்க சுமதிபால மற்றும் சுசில் பிரேம் ஜயந்த ஆகியோரும் உரையாற்றினார்கள்.President - 02President - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்