சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

🕔 March 9, 2016

Article - 76
நா
ட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும். ஏற்கனவே, பல உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள் முடிந்து விட்டதால், அவை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள சபைகளின் பதவிக்காலங்களும் இந்த மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றன. அதனால், எல்லா உள்ளுராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானமொன்று எட்டப்படும் சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.

தற்போதைய நிலையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதில் ஆட்சியாளர்களுக்கு அதிகமான சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக, நாட்டிலுள்ள கணிசமான உள்ளுராட்சி சபைகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவானவர்களின் கைகளில் இன்னும் இருக்கின்றன. இந்த நிலையில், தேர்தலொன்றினை நடத்துவதென்பது ஆட்சியாளர்களுக்கு விஷப்பரீட்சைகயாகவே அமைந்து விடும். குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, அது மிகப்பெரும் சவாலாக இருக்கும். அதனால், உள்ளுராட்சி சபைகளில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்ற ஆதவுத்தளத்தினை அவசரமாகத் தகர்த்து எறிய வேண்டியதொரு தேவை, ஜனாதிபதி மைத்திரிக்கு முன்னால் உள்ளது. அது நடைபெற்று முடியும் வரையில், உள்ளுராட்சித் தேர்தலொன்றுக்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், புதிய தேர்தல் முறையின் அடிப்படையிலேயே, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறும் என்று, துறைசார் அமைச்சரும் ஆட்சியாளர்களும் அடிக்கடி கூறி வருகின்றனர். ஆனால், உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை. இன்னொருபுறம், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் குவிந்துள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கணிசமான கால அவகாசம் தேவைப்படும்.

எனவே, இவை அனைத்தும் பூர்த்தியாகாமல், புதிய தேர்தல் முறைமைகளின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெறுமா எனத் தெரியவில்லை.

அதனால், இந்த வருடம் தேர்தல்கள் எவையும் நடைபெறாது என்று, நிதி ராஜாங்க அமைச்சர் லக்கஷ்மன் யாப்பா அபேவர்த்தன சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.

அமைச்சர் யாப்பா இப்படிக் கூறியதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுநாள் – ‘தேர்தல் நடைபெறும் தினத்தை யாரும் நிர்ணயிக்க முடியாது’ என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூயியிருந்தார். ‘துறைசார் அமைச்சர், ஜனாதிபதி, தேர்தல் ஆணைக்குழு, ஜோதிடர்கள், ஊடக நிறுவனங்கள் அல்லது வேறு தரப்பினருக்கு தேர்தல் நடைபெறும் தினம்பற்றி அறிவிக்க அதிகாரமில்லை. தேவை என்றால் தேர்தல் பற்றி ஜனாதிபதி கூற முடியும்’ என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

எவ்வாறாயினும், உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒன்றினை முகம் கொள்வதற்கான முன் ஆயத்தங்களில், அரசியல் கட்சிகள் இறங்கத் துவங்கியுள்ளன. மட்டுமன்றி, உள்ளுராட்சித் தேர்தல்களில் களமிறங்கும் ஆர்வமுள்ளவர்களும் அடிக்கடி தலைகாட்டத் துவங்கியுள்ளனர்.
அதிலும், கிழக்கு மாகாணத்தில் தேர்தலைக் குறிவைத்து நடக்கும் முன் ஆயத்தங்கள் சற்று ஜரூராகவே இருக்கின்றன. அதிலும் முஸ்லிம் கட்சிகள் இதில் முன்னணியில் உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பகுதிகளில் அமைந்திருக்கும் உள்ளுராட்சி சபைகளில் கணிசமானவற்றினை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. முஸ்லிம் காங்கிரசுக்கு எதிர் அரசியலைச் செய்யும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் கட்டுப்பாட்டில் அக்கரைப்பற்று மாநாகரசபையும், பிரதேச சபையும் இருந்தன.

காத்தான்குடி நகரசபை அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஓட்டமாவடி பிரதேச சபை அமீரலியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச சபையை அமைச்சர் றிசாட் பதியுத்தீனின் ஆளுகைக்குரிய சபையாகக் கருதமுடியும். ஆனாலும், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி உள்ளுராட்சி சபைகளில் ஆளுந்தரப்பாக உள்ளவர்கள் ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில்தான் போட்டியிட்டு தெரிவாகினர்.

இவ்வாறானதொரு நிலையில், எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும், தரப்பினரும் முன்னைய காலங்களை விடவும் தீவிரமாக களத்தில் இறங்குவர் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.

காத்தான்குடி நகரசபை – ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால், இறுதியாக நடைபெற்ற தேர்தலில், காத்தான்குடி நகரசபையை ஹிஸ்புல்லாவிடம் மு.கா. பறிகொடுத்தது. காத்தான்குடி நகர சபைக்கு இறுதியாக தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியானது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலமாகும். அந்த ஆட்சியில் ஹிஸ்புல்லாவுக்கு நிறைய அதிகாரங்கள் இருந்தன. ஆனால், அரசாங்கத் தரப்பில் அப்போது முஸ்லிம் காங்கிரஸ் இருந்த போதும், அவர்களுக்கு எந்தவித அதிகாரங்களும் இருக்கவில்லை.

ஆனால், இந்த ஆட்சியில் முஸ்லிம் காங்கிரசுக்கு மரியாதையும், குறிப்பித்தக்க அளவு அதிகாரங்களும் உள்ளன. ஹிஸ்புல்லாவை எதிர்த்து காத்தான்குடியில் அரசியல் செய்யும் நிலைவரமும் முஸ்லிம் காங்கிசுக்கு உள்ளது. எனவே, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் காத்தான்குடியில் பாரியதொரு பலப்பரீட்சையாகவே அமையும்.

ஆனாலும், காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் ஹிஸ்புல்லா தரப்பினரை விடவும் முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் சிரமப்பட வேண்டியதொரு நிலை காணப்படுகிறது. காரணம், 09 பிரதிநிதிகளைக் கொண்ட காத்தான்குடி நகரசபையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சல்மா ஹம்ஸா என்கிற பெண் உறுப்பினர் மட்டுமே இருந்தார். இவர் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் தங்கையாவார். கடந்த பொதுத் தேர்தலின்போது இவர் ஹிஸ்புல்லாவின் பக்கம் சாய்ந்து விட்டார். இதனால், காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலொன்று இடம்பெறும் போது, பூச்சியத்தில் இருந்துதான் மு.காங்கிரஸ் தனது ஓட்டத்தினை ஆரம்பிக்க வேண்டி உள்ளது.

இதே நிலைவரம்தான் ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலிலும் மு.கா.வுக்கு உள்ளது. 09 உறுப்பினர்களைக் கொண்ட அந்த சபையிலும் மு.காங்கிரஸ் சார்பில் ஒரேயொரு அங்கத்தவர்தான் தெரிவாகியிருந்தார். இந்த நிலையில், ஓட்டமாவடி பிரதேச சபைக்கான எதிர்வரும் தேர்தலில், அமைச்சர் றிசாட் பதியுத்தீனுடைய அரசியல் அதிகாரத்தினையும், பிரதியமைச்சர் அமீரலியையும் எதிர்த்துக் களமிறங்க வேண்டிய கடினமானதொரு நிலைவரம் மு.காங்கிரசுக்கு உள்ளது.

இதுபோலவே, அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றினை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இரண்டு சபைகளிலும் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, அதன் குதிரைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தது.

அக்கரைப்பற்று மாநகரசபையிலும், பிரதேச சபையிலும் முஸ்லிம் காங்கிரசுக்கு தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவம் மட்டுமே இருந்தது.

இவ்வாறானதொரு நிலையில், உள்ளுராட்சித் தேர்தலொன்று நடைபெறுமாயின் அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளை அதாஉல்லா தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வாரா என்கிற கேள்வி உள்ளது.

கடந்த காலங்களில் அதாஉல்லா – மிகப் பலம் வாய்ந்ததொரு அமைச்சராக இருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்தினைப் பெற்றுக் கொண்டவராகவே அனைத்துத் தேர்தல்களையும் எதிர்கொண்டு வந்திருந்தார். ஆனால், தற்போது எந்தவிதமான அரசியல் பதவிகளிலும் அவர் இல்லை. தனது சொந்த அரசியலிலேயே அவர் தோல்வியடைந்த நிலையில் உள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில், அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபைகளை அதாஉல்லாவின் கட்சி கைப்பற்றுமா என்கிற கேள்விகள் இருக்கின்றன.

அக்கரைப்பற்று – முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் சொந்த ஊராகும். கடந்த பொதுத் தேர்தலில் அதாஉல்லா தோல்வியடைந்தபோதிலும், அவர் பெற்றிருந்த 16 ஆயிரத்து 771 வாக்குகளில் மிக அதிகமானதொரு தொகை, அக்கரைப்பற்றிலிருந்தே அவருக்குக் கிடைத்தது. அக்கரைப்பற்று பிரதேசத்தை பௌதீக ரீதியாக மிக அதிகளவில் அபிவிருத்தி செய்தவர் அதாஉல்லா. அவர் கடந்த பொதுத் தேர்தலில் தோற்றுப் போய் விட்டார். அதனால், அதாஉல்லா மீது அக்கரைப்பற்று மக்களுக்கு ஓர் அனுதாபமும் ஏற்பட்டுள்ளது. இந்த அனுதாபபமானது அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேச சபைக்கான தேர்தல்களின்போது, அதாஉல்லா தரப்புக்கான வாக்குகளாக மாறுவதற்குரிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.

இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதாஉல்லாவின் அணியிலிருந்து முஸ்லிம் காங்கிரசுக்கு வந்து சேர்ந்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவத்துக்கும், முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று முக்கியஸ்தர்கள் மற்றும் ஆரம்பகால ஆதரவாளர்களுக்கும் இடையில், மிக வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் மற்றும் ஊடகத் தாக்குதல்கள் போன்றவை சில காலமாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில், அக்கரைப்பற்று மாநாகரசபை மற்றும் பிரதேச சபைக்கான தேர்தல்கள் இடம்பெறுமாயின், மு.காங்கிரஸ் எதிர்பாராதளவு பாதகமான முடிவுகளையே எதிர்கொள்ள வேண்டியதொரு நிலை ஏற்படும்.

இது இவ்வாறிருக்க, அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் தனது தேசிய காங்கிரஸ் கட்சி சார்பான மேயர் வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனை அதாஉல்லா களமிறக்குவதற்குரிய தீர்மானமொன்றுக்கு வந்துள்ளதாக, ஊடகங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. இந்தச் செய்தி குறித்த உண்மைத் தன்மை பற்றி அறிய முடியவில்லை. ஆனால், சேகு இஸ்ஸதீனை அவ்வாறானதொரு இடத்துக்கு அதாஉல்லா கொண்டுவருவார் என்று நம்பமுடியவில்லை.

சேகு இஸ்ஸதீன் – மு.காங்கிரசின் ஸ்தாபகத் தவிசாளராக இருந்தவர். அந்தக் கட்சியின் மூளையாக ஒரு காலத்தில் செயற்பட்டவர். அறிவுத் திமிர் கொண்டவர். அதனால், அதாஉல்லாவை சேகு இஸ்ஸதீன் கடந்த காலங்களில் ஒரு பொருட்டாகவே கருதியதில்லை. தற்போது அரசியல் ரீதியாக சேகு இஸ்ஸதீன் எவ்விதமான பதவிகளுமற்ற நிலையில் உள்ளார். அதனால், ஏதாவதொரு பதவியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தீவிரம் அவரிடம் ஏற்பட்டுள்ளமையினை காணக்கூடியதாக உள்ளது.

எனவே, அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் தனது கட்சியின் மேயர் வேட்பாளராகக் களமிறங்குமாறு, சேகு இஸ்ஸதீனிடம் அமைச்சர் அதாஉல்லா கோரிக்கை விடுப்பாராயின், அதனை சாதகமான வகையில் பரிசீலிப்பதற்கு சேகு இஸ்ஸதீன் முன்வருவார்.

ஆனால், அவ்வாறானதொரு நிலைவரம் உருவாகுவது அதாஉல்லாவுக்கு ஆபத்தாக அமைந்து விடும். சிலவேளை, மேலே கூறியமை போல் அதாஉல்லாவின் கட்சியில் போட்டியிட்டு, சேகு இஸ்ஸதீன் அக்கரைப்பற்று மேயராகத் தெரிவாகி விட்டால், பிறகு சேகு இஸ்ஸதீனை அதாஉல்லாவால் அடக்க முடியாமல் போய்விடும். இருவருக்குமிடையில் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே பாரிய முரண்பாடுகள் தோன்றி விடும் அபாயங்கள் உள்ளன.

சேகு இஸ்ஸதீனும், அதாஉல்லாவும் ஒரே ஊர்க்காரர்கள். இருவரும் ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரசில் இருந்தவர்கள். அந்தவகையில், சேகு இஸ்ஸதீனின் பலம் – பலவீனங்கள் குறித்து அதாஉல்லா நன்கு அறிவார். எனவே, அக்கரைப்பற்று மாநகரசபையின் மேயர் வேட்பாளராக சேகுவை தனது கட்சியில் அதாஉல்லா களமிறக்குவதற்குத் தீர்மானம் எடுப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் அரிதாகவே தெரிகின்றன.

ஆனால், அப்படியொரு தீர்மானத்துக்கு அதாஉல்லா வருவாராயின், அது சேகு இஸ்ஸதீனுக்கு பாரிய வெற்றியாக அமையும்.

இன்னொருபுறம், அதாஉல்லாவும் – சேகு இஸ்ஸதீனும் அக்கரைப்பற்று உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்லின் பொருட்டு கூட்டிணைவார்களாயின், அந்;த நிலைவரமானது மு.காங்கிரசுக்கு மேலும் சிக்கலை உருவாக்கி விடும். ஆனாலும், அதிகாரங்கள் எவையும் அற்ற இரண்டு தனிமனிதர்களின் இந்தக் கூட்டிணைவினை, ஆட்சியில் மிகப் பெரும் அதிகாரத்துடன் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸால் எதிர்கொள்ள முடியாமல் போய் விடுமா என்கிற கேள்வியும் உள்ளது.

இது இப்படியிருக்க, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களின்போது, அம்பாறை மாவட்டத்திலும் தனது அணியினரோடு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் களமிறங்குவார். கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கிய றிசாத் பதியுத்தீன் சுமார் 1500 வாக்குகளால் ஒரு ஆசனத்தைப் பெறும் சந்தர்ப்பத்தினை இழந்தார். ஆனாலும், இந்த நிலைவரமானது றிசாத்துக்கும் அவரின் அணியினருக்கும் உற்சாகத்தினை வழங்கியது. இந்த உற்சாகத்தினை மனதில் வைத்துக் கொண்டு, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலின்போது, அம்பாறை மாவட்டத்தில் தனது அணியினரை அமைச்சர் றிசாத் நிச்சயம் களமிறக்குவார்.

ஒட்டு மொத்தாகப் பார்க்கும் போது, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வென்றாலும், தோற்றாலும் இறுதியில் அதன் ஆளுகையின் கீழ், ஆகக்குறைந்தது ஏழெட்டு சபைகள் வந்துவிடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஆனால், ஹிஸ்புல்லா, றிஸாட், அதாஉல்லா ஆகியோரின் கைகளில் இறுதியாக இருந்த ஒன்றிரண்டு சபைகளும் பறிபோய் விடுவதென்பது, பாரிய இழப்பாகும்.

அதிலும் அதாஉல்லாவுக்கு எஞ்சியிருக்கும் கடைசி அரசியல் நம்பிக்கை, அக்கரைப்பற்றிலுள்ள இரண்டு உள்ளுராட்சி சபைகள் மட்டும்தான். அதிலும் தோற்றுப் போனால் – அவ்வளவுதான்.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (08 மார்ச் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்