அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்?

🕔 March 8, 2016

Drainage issue - 03– முன்ஸிப் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களுக்கு, பாதுகாப்பு மூடிகள் முழுமையாக இடப்படாமை காரணமாக பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, குறித்த வடிகான்களில் தேங்கும் கழிவுகளை கிரமமாக அகற்றிச் சுத்தம் செய்வதில் அலட்சியம் காணப்படுகின்றமையினால், அவற்றிலிருந்து நுளம்புப் பெருக்கம் ஏற்படுவதற்கும், நோய்கள் பரவுவதற்குமான சாத்தியங்கள் உள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குப்பட்ட, அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் வடிகான்களில் ஒரு பகுதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்றுப் பிராந்திய அலுவலகத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இன்னொரு பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலய நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

மேற்படி வடிகான் பிரச்சினைகள் தொடர்பில், அண்மையில் நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடிகான்களில் கழிவுகள் நிரம்பியுள்ளமை தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, அந்த அலுவலகத்தில் கடமையாற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ. ஜௌபரிடம் வினவியபோது; குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

‘பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களை சுத்தப்படுத்தி நிருவகிக்க வேண்டிய பொறுப்பு, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரியதா? அல்லது அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கு உரியதா? என்கிற இழுபறி சில காலமாக நிலவி வந்தது. இந்த நிலையில், வடிகான்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிர்மாணித்த போதிலும், அதனை சுத்தப்படுத்தும் பணிகளை பிரதேச சபையினர்தான் மேற்கொள்ள வேண்டுமென, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய அலுவலகத்தினர் சுட்டிக்காட்டியதோடு, அதனை நிரூபிக்கும் வகையிலான சுற்று நிருபங்களையும் எம்மிடம் ஒப்படைத்தனர். அதனை அட்டாளைச்சேனை பிரதேச சபையினரிடம் நாம் ஒப்படைத்ததோடு, வடிகான்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆயினும் அந்தப் பணி இன்னும் முழுமையாக நடைபெறவில்லை” என்றார்.

இந்த நிலையில், குறித்த வடிகான்களுக்கான பாதுகாப்பு மூடிகளை இடும் பொறுப்பு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு உரியதாகும் என, பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே, மேற்படி வடிகான்களில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இழுத்தடிப்புச் செய்யாமல், ஒரு தரப்பினரை மற்றைய தரப்பினர் சாட்டி விடாமல், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.Drainage issue - 01Drainage issue - 04Drainage issue - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்