ராஜாங்கம் நடத்திய மஹிந்தவின் பாதுகாவலர்கள்; குவிகின்றன முறைப்பாடுகள்

🕔 March 6, 2016

Mahinda - 0785முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு எதிராக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

இதில் மிக அதிகளவான முறைப்பாடுகள் ஓய்வு பெற்ற மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக கிடைக்பெற்றுள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது – மேற்படி மெய்ப்பாதுகாவலர், தனது அதிகாரத்தினைப் பிழையான வகையில் பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவரின் சுற்றுப் பயணங்கள் ஒவ்வொன்றுக்கும் சுமார் 1.5 மில்லியன் ரூபாவினைப் பெற்றுக் கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, கண்டியில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் மூன்றினை, இவர் சட்ட விரோதமாகப் பெற்றுக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது. தற்போது, இந்த மூன்று வீடுகளிலும் ஓய்வு பெற்ற மேஜர் நெவில் வன்னியாராச்சியின் நண்பர்கள் உள்ளனர் என்று தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், ஹம்பாந்தோட்டை வீரகெட்டிய பிரதேசத்திலுள்ள காணியொன்றினை சட்ட விரோதமாகப் பெற்று, அதில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றினை நிர்மாணித்தார் என்றும் இவர் மீது புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் ஏற்படும் வெள்ளம் வடிந்தோடுவதற்குத் தடை ஏற்பட்டதால், மேற்படி நபரின் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். ஆயினும், அப்போது ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அதிகாரி ஒருவரின் மூலமாக, மேற்படி ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகாமல் தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொலிஸாரின் பதவி உயர்வுகள் மற்றும் பதவியிறக்கங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட, மேற்படி நபரின் அதிகாரத்தின் கீழேயே இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தனது மெய்ப்பாதுகாவலர்கள் மேற்கொள்ளும் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டாம் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஜ – பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்