வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும்: ஹக்கீம்

🕔 March 5, 2016

Hakeem - Sainthamaruthu - 03
– மப்றூக் –

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனைக் காரியாலயம் மீண்டும் கல்முனைக்குக் கொண்டு வரப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மாவட்ட அலுவலகம் கல்முனை பிரதேசத்தில் கடந்த 20 வருடங்களாக இயங்கி வந்த நிலையில், கடந்த வாரம் குறித்த அலுவலகம் மூடப்பட்டது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மாவட்ட அலுவலகங்கள் அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் இயங்கி வந்த நிலையில், கல்முனை அலுவலகம் மூடப்பட்டபோதிலும், அம்பாறையிலுள்ள அலுவலகம் தொடர்ந்தும் இயங்கி வருகின்றது.

அமைச்சர் ஹக்கீம் இதன்போது மேலும் கூறியதாவதுளூ

‘கல்முனை அலுவலகத்தினை மூடவுள்ள விடயம் எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. கல்முனை அலுவலகத்தில் வசதிகள் போதாது, கட்டிடத்துக்கான வாடகை அதிகம் என்பவை உள்ளிட்ட பல குறைகள் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கூறப்பட்டிருந்தன.

இதேவேளை, இங்கிருந்த ஊழியர்களும், மேலிடத்தில் சில முரண்பாடுகளைக் கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட அலுவலகம் மீண்டும் கல்முனைக்குக் கொண்டுவரப்படும்.

நான் இங்கு வருவதற்கு முன்னரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சரிடம் பேசினேன். அவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக பிரதி பொது முகாமையாளரை கல்முனைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.

இங்கு வரும் பிரதி பொது முகாமையாளருக்கு கல்முனையில் மீளவும் அலுவலகத்தினை திறப்பதற்கான இரண்டு கட்டிடங்களை நாம் காண்பிப்போம். அவை தொடர்பில் அவர் பரிசீலத்துப் பார்ப்பார். கல்முனையில் மீண்டும் அந்த அலுவலகம் திறக்கப்படும்.

இதற்கான உறுதியை அமைச்சர் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே ஹரீஸ் எம்.பி.யிடம், குறித்த அதிகாரிகளை அழைத்து வந்து இங்குள்ள மாற்றுக் கட்டிடங்களைக் காண்பித்து, வேலைகளை முடிக்குமாறு கூறியிருந்தேன். ஆனால், அதைச் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆயினும் கல்முனையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட அலுவலகத்தினை புதியதொரு இடத்தில் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்படும்’ என்றார்.Hakeem - Sainthamaruthu - 02Hakeem - Sainthamaruthu - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்