தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர்
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் மிகவும் முக்கிய சந்தேக நபர்கள் 05 தொடக்கம் 06 பேர் வரையிலானோர்> குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.
மேற்படி கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட 05 முதல் 06 பேர் வரையிலான மிக முக்கிய சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.
17 மே 2012 ஆம் ஆண்டு கிருலப்பனையில், தாஜுதீனின் உடல் – சுவரொன்றில் மோதுண்ட அவரின் காரினுள் இருந்து மீட்கப்பட்டது.
விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட தாஜுதீன், அங்கு அதிகமாக மது உட்கொண்டமை காரணமாக, நிலை தடுமாறிய நிலையில் வானகத்தைச் செலுத்திய போது நேர்ந்த விபத்தில் மரணமானார் என்று அப்போது பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, விபத்தின் போது கார் தீப் பிடித்து எரிந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
ஆயினும், இந்த மரணம் தொடர்பில் பின்னர் சந்தேகம் ஏற்பட்டதோடு, தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாகவும் நம்பப்பட்டது.