ராஜபக்ஷக்களின் அசிங்கம்: அம்பலத்துக்கு வரும் சீ.எஸ்.என். மோசடி

🕔 February 26, 2016

CSN - 097சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புகளுக்காக, ராஜபக்ஷவினரின் அழுத்தங்களின் பேரில், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

அந்தவகையில், கடற்படை, தேசிய ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் வளங்களைப் பயன்படுத்தி ஒளிப்பரப்பு கோபுரங்கள் அமைப்பது மற்றும் ட்ரான்ஸ்மீட்டர்களை பொருத்துவது உட்பட இலத்திரனியல் உபகரணங்களை பொருத்தும் கட்டடங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சீ.எஸ்.என். ஒளிபரப்புக்காக பிதுருதலாகல மலையில் இருந்து ஒளிப்பரப்புகளுக்காக ஆரம்பத்தில் கடற்படையின் தொலைத்தொடர்பு கோபுரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர், சீ.எஸ்.என் தொலைக்காட்சிக்கான ஒளிப்பரப்பு கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எனினும் ட்ரான்ஸ்மீட்டர் உட்பட இலத்திரனியல் ஒளிபரப்பு கருவிகள் தற்போதும் கடற்படையினரின் கட்டடத்திலேயே பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் சீ.எஸ்.என். ஒளிப்பரப்பு கோபுரத்துக்கு கடற்படை கோபுரத்தில் இருந்தே மின்சாரம் பெறப்படுகிறது.

தொலைக்காட்சி தனது ஒளிப்பரப்புக் கோபுரத்துக்கு பணியாளர்களை நியமிக்காததுடன் கடற்படை பணியாளர்களே அதிலும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் தெனியாய எனசல் தோட்டத்திலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் ஒலி,ஒளிப்பரப்பு கோபுரங்களையும் சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

அத்துடன் அங்குள்ள தேசிய ரூபாவாஹினிக் கூட்டுத்தபானத்துக்குச் சொந்தமான மின்பிறப்பாக்கியில் இருந்து, பல முறை பலவந்தமாக மின்சாரம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்