கிழக்கு மாகாண வைத்தியசாலைகளைத் தரமுயர்த்த, அமைச்சரவை அங்கீகாரம்; சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

🕔 February 17, 2016

Naseer - 012– எம்.வை. அமீர் –

ம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சில வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டம் இறக்கக் கண்டியில் மத்திய மருந்தகம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டம், நேற்று செவ்வாய்கிழமை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில், மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது,  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் முன் வைத்த கோரிக்கைகளை அமைச்சரவை ஏற்றுக் கொண்டு அங்கீகாரமளித்தது.

அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் கீழ் இயங்கும் அன்னமலை ஆரம்ப வைத்தியப் பிரிவு ‘சீ’ தரத்துக்கும், மத்திய முகாம் ‘சீ’ தர வைத்தியசாலை ‘பி” தரத்துக்கும், இறக்காமம் ‘சி’ தர வைத்தியசாலை ‘ஏ’ தரத்துக்கும் உயர்த்தப்படவுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

மேலும், ஆலங்குளம் ஆரம்ப சுகாதார வைத்திய பிரிவு ‘சி’ தரத்துக்கும், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை ‘ஏ’ தரத்துக்கும் உயர்த்தப்படவுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் கீழுள்ள சந்திவெளி ‘சி’ தர வைத்தியசாலை ‘பி’ தரத்துக்கும், மையிலடித்தீவு ‘சி’ தர வைத்தியசாலை ‘ஏ’ தரத்துக்கும் உயர்த்தப்படவுள்ளன.

இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் கஷ்டப் பிரதேசமான இறக்கக்கண்டியில் மத்திய மருந்தகம் ஒன்றினை புதிதாக அமைப்பதற்கும் அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் நசீர் கூறினார்.

அண்மையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர், சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்தித் தருவேன் என வாக்குறுதி வழங்கிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்